உற்சாகப் போதையும், கவன ஈர்ப்புத் தேவையாலும் காட்டுத்தீக்களை உண்டாக்கிய பிரெஞ்ச் தீயணைப்பு வீரன்.
பிரான்சின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பல காட்டுத்தீக்களை உண்டாக்கியவன் தீயணைப்புப் படையில் பங்குபற்றுபவன் ஒருவனே என்ற உண்மை சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்திருக்கிறது. மே 26, ஜூலை 21, 26, 27 ம் திகதிகளில் அப்பிராந்தியம் கடுமையான வெப்ப அலையால் தாக்கப்பட்டிருக்கும் சமயத்தில் ஏற்பட்ட காட்டுத்தீக்களுக்குத் தானே காரணம் என்று பொலீசாரால் கைது செய்யப்பட்ட அந்தத் தீயணைப்புப் படையில் பங்குபற்றுகிறவன் ஒத்துக்கொண்டிருக்கிறான்.
கைது செய்யப்பட்ட தீயணைப்புப்படை வீரனின் வாக்குமூலத்தின்படி அவன் அத்தீக்களை ஆரம்பிக்கக் காரணம் உற்சாகப் போதையும், மற்றவர்களின் கவனிப்புக்கான ஆர்வமுமே என்கிறான். தனது நடவடிக்கைகளுக்காக வெட்கப்பட்டு, மன்னிப்புக் கோரும் அவன் தான் ஒரு வழியாகக் கைது செய்யப்பட்டிருப்பதற்காக ஆசுவாச உணர்வை அடைந்திருக்கிறான்.
நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டால் சுமார் 150,000 எவ்ரோக்கள் தண்டமும், சுமார் 15 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனையும் அவனுக்கு விதிக்கப்படலாம்.
தீயணைப்புப் படையைச் சேர்ந்த அவன் உண்டாக்கிய காட்டுத்தீயால் பல அழிவுகள் ஏற்பட்டன. பல்லாயிரக்கணக்கானோரை மீட்புப் படையினர் அவர்களின் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவேண்டியிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்