ஈராக்கியப் பாராளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் இரண்டாம் நாளைக் கழிக்கிறார்கள்.
ஈராக்கின் பலமான ஷீயா மார்க்கப் போதகரும், அரசியல்வாதியுமான முக்தடா அல்- சாதிர் ஆதரவாளர்கள் நாட்டின் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறியடித்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். தேர்தல் நடந்து பத்து மாதங்களுக்குப் பின்னரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் இழுபறியால் ஒரு அரசாங்கத்தை நிறுவ முடியாத நிலைமை ஈராக்கில் ஏற்பட்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாகவே இந்த நகர்வு ஒரு பகுதிப் போராட்டக்காரர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது.
முஹம்மது அல் ஷியா அல் சுதானி என்ற ஈரான் அரசின் கையாளான இன்னொரு ஷீயா மார்க்க அரசியல்வாதியைப் பாராளுமன்றம் பிரதமராகத் தெரிவுசெய்யலாம் என்ற நிலைமையிலேயே முக்தடா அல் சாதிர் நாடெங்குங்குமுள்ள தனது ஆதரவாளர்களை எதிர்ப்பைக் காட்டும்படி தூண்டியிருந்தார். அதைத் தொடர்ந்தே அவர்கள் கடும் பாதுகாப்புள்ள பாராளுமன்றத்தினுள் நுழைந்து இரண்டாவது நாளையும் அங்கே கழித்து வருகிறார்கள்.
அல் சாதிர் ஆதரவானவர்கள் தேர்தலில் அதிகளவு இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் பெரும்பான்மை அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எந்தக் கட்சியுமே பெரும்பான்மை பெறாத நிலையில் ஒரு அரசாங்கத்தையோ, பிரதமரையோ பாராளுமன்றத்தால் தெரிவு செய்ய முடியாமல் நாட்டின் நிலைமை முடமாகியிருக்கிறது. ஜூன் மாதத்தில் அல் சாதிர் ஆதரவாளர்களான 73 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துப் பதவி விலகினார்கள்.
அல் சாதிர் ஆதரவாளர்கள் தமது பாராளுமன்ற இடங்களைத் துறந்ததால் அங்கே எதிரணியினரின் கை பலமாகியது. அனாலும், அவர்களால் ஒரு அரசையோ, பிரதமரையோ தெரிவு செய்ய இயலவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்