ஹெராத் நகரப் பள்ளிவாசலில் தற்கொலைக்குண்டு வெடித்து 18 பேர் மரணம்.
வெள்ளியன்று ஆப்கானிஸ்தானிலிருக்கும் ஹெராத் நகரப் பள்ளிவாசலொன்றில் குண்டுகளுடன் ஒருவன் வெடித்ததில் சுமார் 18 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் 20 பேர் காயமடைந்திருக்கிறார்கள். தலிபான்களின் முக்கிய இமாம்களில் ஒருவரான முஜிப் ரஹ்மான் அன்சாரியும் அவரது பாதுகாவலர்களும் இத்தாக்குதலில் இறந்திருப்பதாக நகரின் மீட்புப்படையினர் குறிப்பிட்டனர்.
முஜிப் ரஹ்மானின் கைகளை முத்தமிடுவதாகப் பாவனை செய்து கொலையாளி தன்னிடமிருந்த குண்டை வெடித்ததாகத் தெரியவருகிறது. நாட்டின் முக்கியமான இஸ்லாமியத் தலைவர்களொருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பதாகவும் அதற்குப் பின்னாலிருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்று தலிபான்களின் பேச்சாளர் ஸபியுல்லாஹ் முஜஹீத் சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு உரிமைகளைக் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிடும் நாடுகளைக் கடுமையாக விமர்சித்து வரும் இமான்களில் ஒருவர் முஜிப் ரஹ்மான் அன்சாரி ஆகும். தலிபான்களின் ஆட்சியை எதிர்ப்பவர்களின் கழுத்தை வெட்டியெறியவேண்டும் என்று பகிரங்கமாக மேடைகளில் பிரச்சாரம் செய்துவந்தார் அவர்.
தலிபான்களின் ஆட்சியில் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ரமழான் மாதத்தில் ஷீயா இஸ்லாமியர்களின் பள்ளிவாசர்கள் பலவற்றில் குண்டுகள் வெடித்துப் பலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஹெராத்தில் குண்டு வெடிப்பு நடந்த பள்ளிவாசல் தலிபான்களின் மார்க்கமான சுன்னி இஸ்லாத்தைச் சேர்ந்ததாகும்.
தலிபான்களின் ஆட்சியின் ஆரம்பக்கட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால், சமீப காலத்தில் இதுபோன்ற தற்கொலைத்தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் தலிபான்களின் முக்கிய ஆன்மீகத் தலைவர்கள் மீதான குறிவைத்துத் தாக்குதல்களும் அதிகமாகி வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்