புத்தின் பங்குபற்றாமலே, சோவியத் யூனியன் மக்களுக்குச் சுதந்திரம் கொடுத்த கொர்பச்சேவின் இறுதிச் சடங்கு நடந்தது.
பனிப்போர் என்ற பிரபல அரசியல் சொற்பிரயோகத்தின் முக்கிய பாகங்களில் ஒன்றான சோவியத் யூனியனின் கடைசித் தலைவராக இருந்த மிக்கேல் கொர்பச்சேவின் இறுதி யாத்திரை செப்டெம்பர் 03 தேதியன்று மொஸ்கோவில் நடந்தது. உலகின் முக்கிய தலைவர்கள் பலர் பங்குபற்றிய அந்த நிகழ்ச்சியில் ரஷ்யாவின் ஜனாதிபதி புத்தின் பங்குபற்றவில்லை என்பது சர்வதேச ஊடகங்களால் சுட்டிக் காட்டப்படுகின்றன.
இவ்வார ஆரம்பத்தில் தனது 91 வது வயதில் இறந்துபோன கொர்பச்சேவ் உலக நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்களால் கௌரவத்துடன் நினைவுகூரப்பட்டார். கொர்பச்சேவின் உறவினர்களுக்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்து ஜனாதிபதி புத்தின் செய்தி வெளியிட்டபோது 15 மணி நேரங்கள் கழிந்திருந்தன. ரஷ்ய அரசினால் கொர்பச்சேவின் இறுதி நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டு நடத்தப்பட்டாலும் கூட தேசிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால் எமது நாடு ஒரு சிக்கலான பொருளாதார, சமூக நிலைமையில் இருந்தபோது சீர்த்திருத்தங்கள் தேவையென்பதை அவர் புரிந்துகொண்டார். அவர் அதற்காக எடுத்த நடவடிக்கைகள் உலகச் சரித்திரத்தின் வழியை மாற்றுவதற்கு முக்கிய காரணிகளாக இருந்தன,” என்று புத்தின் குறிப்பிட்டார். அவரது நாளாந்தத் திட்டங்கள் இடம் கொடுக்காததால் இறுதி யாத்திரைகளில் அவரால் பங்குகொள்ள முடியவில்லை என்று அவரது காரியாலயத்திலிருந்து விளக்கமளிக்கப்பட்டது.
சோவியத் யூனியனுக்கு கொர்பச்சேவ் ஜனாதிபதியாக இருந்தபோது அந்த நாட்டின் உளவுத்துறையின் முக்கிய அதிகாரியொருவராகப் பணியாற்றியவர் புத்தின். கொர்பச்சேவுக்கு எதிர்மறையான அரசியல் கோட்பாடுகளைக் கொண்ட புத்தின் கொர்பச்சேவ் சோவியத் யூனியன் பிளவுபடவும் அதன் பிடியிலிருந்த மற்றைய குடியரசுகள் சுதந்திரமாகவும் செல்ல அனுமதித்ததை முற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபற்றி தான் ஜனாதிபதியான பின்னர் வெளிப்படையாக விமர்சித்தும் இருக்கிறார்.
லெனின், ஸ்டாலின் ஆகிய சோவியத் தலைவர்களின் இறுதி நிகழ்ச்சிகள் நடந்த மொஸ்கோவிலிருக்கும் தொழிலாளர்கள் தலைமையகத்தில் கொர்பச்சேவின் உடல் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் அங்கே வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். சர்வதேச அளவில் கொர்பச்சேவ் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தாலும் ரஷ்யாவில், முக்கியமாக அரசியல் உயர்மட்டத்தில் இகழப்பட்டிருக்கிறார். உலகத் தலைவர்கள் பலரின் அஞ்சலிச் செய்திகள் நாள் முழுவதும் அலைகளாக வந்துகொண்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்