ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், நாட்டோவுக்கும் எதிராக செக்கியர்கள் கொடிபிடித்து ஊர்வலம் சென்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் படுவேகமாக எகிறியிருக்கும் கொள்வனவுப் பொருட்களின் விலைகளுக்குப் பின்னாலிருக்கும் எரிபொருள் விலையுயர்வு ஒரு சாராருக்கு ஒன்றியம், நாட்டோ ஆகிய அமைப்புக்களின் மீதான எதிர்ப்பைப் பகிரங்கமாகக் காட்ட இடம் கொடுத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமையைத் தாங்கும் செக் குடியரசில் சுமார் 70,000 பேர் சனிக்கிழமையன்று Prague நகரில் தமது அதிருப்தியை கொடிகள், கோஷங்களுடன் தெரிவித்தார்கள்.
செக் குடியரசின் பழமைவாத வலதுசாரிகளும், ரஷ்ய ஆதரவு இடதுசாரிகளும், அகதிகளுக்கு எதிரான குழுக்களும் சேர்ந்து அந்த ஊர்வலத்தில் பங்குபற்றியதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. தமது நாடு ரஷ்ய – உக்ரேன் போரில் நடு நிலைமையைக் கைக்கொள்ளவேண்டும், ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யவேண்டும் என்று அவர்கள் கோரினார்கள்.
செக் குடியரசில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு, வாழ்க்கைசெலவு விலையேற்றங்கள், பணவீக்கம் ஆகியவற்றிலிருந்து மக்களின் பாரத்தைக் குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்று எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையன்று ஆளும் கட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருந்தார்கள். அதிலிருந்து அரசு தப்பியிருக்கிறது.
செக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து உக்ரேனுக்குத் தனது முழு ஆதரவையும் வழங்கி வருகிறது. உக்ரேனுக்கு இராணுவத் தளபாடங்களை வழங்கியிருப்பதுடன் கணிசமான அளவு உக்ரேன் அகதிகளுக்கும் தமது நாட்டில் குடியேற வாய்ப்பளித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்