ஜேர்மனியின் மலிவு விலை ரயில் சேவையால் 1.8 மில்லியன் தொன் கரியமிலவாயு வெளியிடல் குறைந்திருக்கிறது.

கோடைகால ஆரம்பத்தில் ஜேர்மனி தனது பொதுப்போக்குவரத்தை மக்கள் அதிகம் பாவிக்கவேண்டும் என்று ஊக்குவிப்பதற்காக எடுத்த நடவடிக்கை பெரும் வெற்றியளித்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் சுமார் ஒரு மாதத்துக்குத் தொடரவிருக்கு அந்த “ஒன்பது எவ்ரோவுக்கு மாதத்துக்கான பிராந்தியப் போக்குவரத்தில் எவ்வளவும் பயணிக்கலாம்” என்ற திட்டத்துக்கான பயணச்சீட்டுக்கள் இதுவரை 52 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது. 

ரஷ்ய – உக்ரேன் போரினால் ஏற்பட்ட எரிபொருள் விலையுயர்வு, தட்டுப்பாடு, பொதுவான விலையேற்றங்கள் மக்கள் தினசரி வாழ்க்கையில் ஏற்றிய சுமையை ஓரளவு குறைக்கவேண்டும் என்பதற்காகவே அந்தத் திட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. அதேசமயம், அதன் மூலம் தனியார் வாகனங்களைப் பாவிப்பதைக் குறைப்பதன் மூலம் வாகனங்கள் மூலம் வெளியேறும் கரியமிலவாயுவைக் குறைப்பதும் ஒரு நல்விளைவாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இலகுவாகப் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்ய முடிதல், தாராளமான அளவில் போக்குவரத்து, தமது வாகனங்களைப் பயணத்துக்கு உபயோகம் செய்யாமல் தடுத்தல் ஆகியவை தம்மை அந்தப் பயணச்சீட்டு வாங்கத் தூண்டியதாக அதுபற்றிய கணிப்பில் பலர் குறிப்பிட்டிருந்தார்கள். சுமார் 88 % பாவனையாளர்கள் அந்தப் பயணச்சீட்டின் பிரயோசனத்தை மெச்சியிருக்கிறார்கள்.

பலரும் தமது வாகனங்களை வீட்டில் விட்டுவிட்டுப் பொதுப்போக்குவரத்துகளில் பயணம் செய்ததால் காலநிலைக்கு ஏற்பட்ட நேரடியான நல்விளைவாக ஜேர்மனியின் கரியமிலவாயு வெளியிடல் 1.9 மில்லியன் தொன் அளவால் குறைந்திருக்கிறது. 

மலிவான அந்த மாதப்பயணச்சீட்டுத் திட்டம் முடிந்த பின்னரும் ஏதாவது வழியில் குறைந்த விலையில் மாதப்பயணச்சீட்டுகள், வருடப் பயணச்சீட்டுக்களை அறிமுகம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. அதனால், முன்னரை விடக் குறைந்த விலையிலான பிராந்தியப் பொதுப்போக்குவரத்துக்கான மாதப்பயணச்சீட்டுகள் பற்றிய பிரேரணைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கின்றன. ஜேர்மனியின் தற்காலிகமான முக்கிய அரசியல் விடயங்களிலொன்றாகப் பொதுப்போக்குவரத்தின் எதிர்காலம் பற்றிய கேள்வி ஆகியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *