மாதம் முழுவதும் சுமார் 10 டொலருக்குப் பெரும்பானான நகரப் பொதுப் போக்குவரத்தை எல்லையின்றிப் பாவிக்கலாம்.

ஜேர்மனியில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்குச் செயற்பாட்டில் இருக்கப்போகும் ஒரு பயணச்சீட்டின் விலை பத்து டொலருக்கும் குறைவானது. அந்தப் பயணச்சீட்டை வைத்திருப்பவர் தனக்கு வேண்டிய அளவுக்கு நகரங்களுக்குள்ளே போகும் ரயில்களில், பேருந்துகளிலும் பாவிக்கலாம். விற்பனைக்கு வந்த முதலிரண்டு நாட்களிலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணச்சீட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

ஜேர்மனிய அரசு சமீபத்தில் திடீரென்று அறிமுகம் செய்திருக்கும் இந்தத் திட்டத்துக்காகச் சுமார் 2.5 பில்லியன் எவ்ரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் குறிக்கோள்கள் இரண்டாகும். ரஷ்யாவின் எரிபொருட்களை வாங்காமல் நிறுத்தியிருப்பதால் எகிறியிருக்கும் போக்குவரத்துச் செலவுகளிலிருந்து மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கொடுப்பது அவற்றிலொன்று. இன்னொன்று, நீண்டகால நோக்கில் மக்கள் தமது தனியார் வாகனங்களை ஒதுக்கிவிட்டுப் பொதுப் போக்குவரத்தைப் பாவிப்பதை ஊக்குவிப்பது.

மக்கள் அதிகமாகப் பயணிக்கும் கோடை மாதங்களிரண்டிலும் இந்தப் பிரத்தியேகப் பயணச்சீட்டைப் பாவிக்கலாம். ஆகஸ்ட் மாதத்தில் இதுபோன்ற ஏதாவது மலிவான பயண ஏற்பாடுகள் அறிவிக்கப்பட இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. தமது எரிபொருட்களின் விலையேற்றங்களால் ஆகஸ்ட் மாதத்திலிருந்து பயணச்சீட்டு விலைகளை உயர்த்தப்போவதாக ஏற்கனவே நிறுவனங்கள் எச்சரித்திருக்கின்றன. எனவே, அந்தச் சமயத்தில் அரசு மக்களுக்கு என்ன நிவாரணம் கொடுக்கவிருக்கிறது என்பதைப் பொறுத்தே ஆரம்பமாகியிருக்கும் இந்தத் தற்காலிகத் திட்டத்தின் வெற்றியின் விளைவு இருக்கும் என்று எண்ணப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *