ஜி 7 நாடுகளிலேயே மோசமான பொருளாதாரப் பின்னடைவுகளைக் காட்டிவரும் ஐக்கிய ராச்சியத்தின் புதிய பிரதமர்.
2015 தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியத்தின் கொன்சர்வடிவ் கட்சி தெரிந்தெடுத்திருக்கும் நாலாவது பிரதமராகிறார் லிஸ் டுருஸ். இக்காலத்துக்குள் நாடு ஒன்றன்பின் ஒன்றாகப் பல தீவிரமான பிரச்சினைகளைச் சந்தித்தது. பலமாக இருந்த நாட்டின் பொருளாதாரம் பல அடிகளை வாங்கியது. உக்ரேன் – ரஷ்யப் போரின் பின்னர் ஏற்பட்ட எரிசக்தி விலையேற்றம், உணவுப்பொருட்களின் விலையேற்றங்களால் ஜூலை மாதத்தில் 10.1 % பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஜோன்சனின் அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக இருந்த லிஸ் டுருஸ் தனது போட்டி வேட்பாளருடன் ஒப்பிடும்போது பிரிட்டிஷ் பழமைவாதக் கோட்பாடுகளைப் பலமாக ஆதரிப்பவர் என்பதாலேயே அவரை அவரது கட்சிக்காரர்கள் தெரிந்தெடுத்தார்கள் என்று அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். குடிமக்களின் வாழ்வில் அளவுக்கதிகமாக அரசு தலையிடலாகாது, வரிகளின் சுமை குறைக்கப்பட்டுப் பொருளாதாரச் செயற்பாடு தனியாரிடமே பெருமளவில் விடப்படவேண்டும் என்று குறிப்பிடிருகிறார் டுருஸ்.
2010 இல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட லிஸ் டுருஸ் அச்சமயத்திலிருந்தே கொன்சர்வடிவ் கட்சியின் மையத்திற்குள் நட்சத்திரமாக மாறியவர். விவசாயத்துறை அமைச்சராகவும் இருந்த லிஸ் டுருஸ் தனக்குச் சரியானதாகப் படும் விடயங்களுக்காக எவருடனும் மோதத் தயாராக இருப்பவர் என்று விபரிக்கப்படுகிறார்.
லிஸ் டுருஸுக்கு எதிராகக் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர் ரிஷி சுனாக். இந்தியப் பின்னணியைக் கொண்ட சுனாக் டுருஸுக்கு ஈடாக கொன்சர்வடிவ் கட்சியின் மையத்துக்கு வேகமாக வந்தவர். ஜோன்சனின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளைப் பெற்றிருந்த அவர் நாட்டின் நிதி அமைச்சராகவும் இருந்தவர். ஜோன்சனின் தலைமையில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிவிட்டு அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றியெடுத்த ஜோன்சனின் பதவியை உண்மையிலேயே ஆட்டி விழுத்தியவர் என்று கருதப்படுகிறார்.
கொன்சர்வடிவ் கட்சியின் முக்கிய அங்கத்தவர்களிடையே நடந்த வாக்கெடுப்பில் ரிஷி சுனாக் 60,399 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பிரதமர் பதவிக்குப் போட்டி என்று தன் பெயரை அறிவித்ததிலிருந்தே அவ்விடத்துக்கு வருவார் என்று கணிக்கப்பட்ட லிஸ் டுருஸ் 81,326 வாக்குகளைப் பெற்று டௌனிங் வீதி 10 இலக்க வீட்டுக்குள் புகவிருக்கிறார்.
பாரம்பரியமாகப் பிரதமர் மகாராணியால் நியமிக்கப்படுவார். மகாராணி எலிசபெத் II தனது முதுமையின் பலவீனங்களால் பாதிக்கப்பட்டு ஸ்கொட்லாந்தில் பால்மொரல் அரண்மனையில் தங்கியிருக்கிறார். எனவே, பிரதமர் பதவியேற்கும் வைபவம் வழக்கம்போல பக்கிங்காம் அரண்மனையில் நடக்காது. செவ்வாயன்று ஸ்கொட்லாந்தில் மகாராணியைச் சந்தித்துப் பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்வார் லிஸ் டுருஸ்.
சாள்ஸ் ஜெ. போமன்