வன்முறைகளுட்பட 59 குற்றங்களுக்குத் தண்டிக்கப்பட்டும் சுதந்திரமாக நடமாட முடிவதெப்படியென்ற கேள்வி கனடாவில்.
கடந்த ஞாயிறன்று கனடாவின் சஸ்கச்சேவன் மாநிலத்தின் பழங்குடிகள் வாழும் இரண்டு கிராமங்களில் நடந்த கத்திக்குத்துக் கொலைகளில் தேடப்பட்ட இரண்டாவது இளைஞன் நான்கு நாட்கள் பொலீஸ் வேட்டையின் பின்னர் கைதுசெய்யப்பட்டான். அந்த 32 வயதுக்காரன் தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே இறந்துவிட்டான் என்று அறிவிக்கப்படுகிறது.
கத்திக்குத்துக்கொலைகளில் ஈடுபட்ட இரண்டு பேரும் சகோதரர்களே. அவர்களால் தாக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள் பலர் குறிவைக்கப்பட்டோர், சிலர் இடையில் அகப்பட்டுக்கொண்டவர்கள் என்று கருதப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் ஆறு பேர் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாகும். இறந்தோர் 10 பேரைத் தவிர 18 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களில் 10 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
கொலைகளில் ஈடுபட்ட ஒருவன் ஏற்கனவே இறந்துபோயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொலீசாருக்குக் கிடைத்த துப்பு மூலம் வீதியில் வாகனமொன்றில் வந்துகொண்டிருந்த இரண்டாவது சகோதரன் கைது செய்யப்பட்டதாக பொலீசார் தெரிவித்தனர். James Smith Cree Nation என்ற பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசத்தின் வெல்டன் என்ற கிராமத்தில் அவன் கைதுசெய்யப்பட்டான்.
கைதுசெய்யப்பட்டவன் 59 குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறான். கொள்ளை, வன்முறைகள் ஆகியவற்றுக்காக நான்கு வருடச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவன் பெப்ரவரியில் தான் கட்டுப்பாடுகளுடன் வெளியே வந்தான். ஆனால், தனது கட்டுப்பாடுகளை மீறியதால் மே மாதம் முதல் பொலீசாரால் தேடப்பட்டு வருகிறான்.
அவன் போதை மருந்துகளின் பாவிப்பால் தான் பைத்தியமாக மாறிவிடுவதாகப் பொலீசாரிடம் கைதான சமயமொன்றில் குறிப்பிட்டிருக்கிறான். போதைமருந்துகளால் பழங்குடியினர் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாகப் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டும் அதுபற்றிக் கனடிய அரசு கவனமெடுப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. அதைத் தவிர, பற்பல வன்முறைக் குற்றங்கள் செய்தவர்களை எந்த அடிப்படையில் சிறைக்கு வெளியே நடமாட விடுகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இளைஞனை எந்த அடிப்படையில் சமூகத்தில் நடமாட அனுமதித்தார்கள் என்று தான் அறிந்துகொள்ள விரும்புவதாகக் கனடியப் பாதுகாப்பு அமைச்சர் சஞ்சலத்துடன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்