பிரிட்டர்களின் அரசராக முடிசூடுகிறவர்களில் அதிக வயதானவர் சாள்ஸ் III.
வியாழனன்று பிற்பகல் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் தனது 96 வது வயதி நிரந்தரமாகக் கண்களை மூடிக்கொண்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் அவரது மூத்த மகன் சாள்ஸ் நாட்டின் உத்தியோகபூர்வமான அரசன் ஆகினார். அவரது முடிசூட்டு விழாவின் திகதி பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
வியாழன்று மதியமே மகாராணியின் உடல்நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டு குடும்பத்தின் நெருக்கமான உறுப்பினர்கள் அவர் ஓய்வெடுத்து வந்த ஸ்கொட்லாந்து மாளிகைக்கு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். பிள்ளைகளான சாள்ஸ், ஆன் ஆகிய இருவரும் அங்கே வந்து தாயாரைக் கடைசியாகச் சந்திக்க முடிந்தது. பிரின்ஸ் ஹரியின் விமானத்தில் பறந்துகொண்டிருந்தார். அவரும் மனைவியும் நிகழ்ச்சியொன்றில் பங்குகொள்வதற்காகச் சமீப நாட்களில் லண்டனுக்கு வந்திருந்தனர்.
மகாராணியின் மறைவுக்குப் பின்னர் உடனடியாக எவரெவருக்கு அறிவிக்கப்படவேண்டும், நடக்கவேண்டிய திட்டங்கள் என்ன, அவைகளின் ஒழுங்கு எப்படியிருக்கவேண்டும் என்பவை பற்றிக் கடந்த வருடத்திலேயே விபரமாகத் திட்டங்கள் போடப்பட்டிருந்தன. London Bridge என்றழைக்கப்படும் உத்தியோகபூர்வமாக வரையறுக்கப்பட்ட அந்தத் திட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
எலிசபெத் மகாராணி உலக நாடுகளெங்கும் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தவர். அவரது இடத்துக்கு அடுத்ததாக வரப்போகும் சாள்ஸ் III பல சச்சரவுகளுடன் சம்பந்தப்பட்டவர். 73 வயதான அவரே பிரிட்டிஷ் அரசராக முடிசூடிக்கொள்பவர்களில் முதியவராகும். அவரது மனைவியான கமில்லா ராணியாகிறார், ஆனால், அவரது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
எதிர்பாராத சமயத்தில் தனது 26 வயதிலேயே முடியேற்கப் பயிற்சியின்றி அப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட எலிசபெத் மகாராணியுடன் ஒப்பிடும்போது தனது வாழ்நாளில் பெரும்பகுதியை அரசனாகுவதற்காகத் தயார் செய்து கொண்டவர் சாள்ஸ். ஆயினும் அவர் பொறுப்பற்றவர், பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார். மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்த தனது முதல் மனைவி டயானாவை விவாகரத்துச் செய்துகொண்டதன் மூலம் அவர் மீது பலருக்குக் கோபமே இருக்கிறது.
கார்ல் பிலிப் ஆர்தர் ஜோர்ஜ் 1948 நவம்பர் 14 ம் திகதி பிறந்தார். அவருக்கு மூன்று வயதாக இருக்கும்போது தயார் மகாராணிப் பொறுப்பை எடுக்கவேண்டி வந்தது. மற்றவர்களுடன் பழகுவதற்கும், பலரிடையே தோன்றுவதற்கும் சிறு வயதிலிருந்து வெட்கப்பட்டவர் சாள்ஸ். தனது தந்தையைக் கடுமையானவர் என்று வர்ணிக்கும் சாள்ஸ் சிறு வயதில் பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும்போது அவர் பின்னர் ஒளிந்துகொள்வதுண்டு.
ஸ்கொட்லாந்தில் தான் தங்கிப் படித்த பாடசாலையிலேயே மகனையும் படிக்க அனுப்பினார் தந்தையார் பிலிப். கடுமையான சட்ட ஒழுங்குகளைக் கொண்ட அந்தப் பாடசாலையில் தான் படித்த காலத்தை நரகம் என்று விபரிக்கிறார் சாள்ஸ். அங்கே அவர் மற்றைய மாணவர்களால் ஒடுக்கி, அடக்கப்பட்டு வந்ததையும் அவர் விபரித்திருக்கிறார்.
அதன் பின்னர் அவர் ட்ரினிடி கல்லூரி, கேம்பிரிஜ் ஆகிய கல்விக்கூடங்களில் பயின்றார். மானிடவியல், அகழ்வாராய்ச்சி ஆகியவைகளையும் சரித்திரத்தையும் அவர் கற்றுத் தேறினார். இளவயதில் விளையாட்டுக்களில் அவர் ஆர்வம் செலுத்தினார். போலோ, பனிக்காலச் சறுக்கல் விளையாட்டுகள், மூழ்கி நீந்துதல் ஆகியவை அவருக்குப் பிடித்தமானவை. மற்ற அரச குடும்பத்தினர் போல அவரும் இராணுவத்தில் பயிற்சி பெற்று விமானப்படை, கடற்படையில் சில வருடங்களைச் செலவிட்டார்.
அரச குடும்பத்தினரல்லாத டயானாவை அவர் காதலித்து 1981 இல் மணந்துகொண்டார். அவர்களுக்கு வில்லியம், ஹரி ஆயியோர் 1982, 1984 ம் ஆண்டுகளில் பிறந்தனர். அச்சமயத்திலேயே சாள்ஸுக்குத் தோழியாக இருந்த கமில்லாவுடனான தொடர்புகள் இறுக்கமானதால் ஏற்பட்ட பிளவு 1996 இல் சாள்ஸ் – டயானா விவாகரத்தில் முடிந்தது. டயானா அதற்கடுத்த வருடம் விபத்தொன்றில் இறந்தார். சாள்ஸ் – கமில்லா உறவு தொடர்ந்தது. 2005 இல் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
காலநிலை மாற்றங்களைத் தடுக்க மனிதர்கள் தமது சூழலைப் பேணுவதில் ஈடுபடவேண்டும், அதற்கான நடவடிக்கைகளை வேகமாக எடுத்து மனித குலத்தை அழிவிலிருந்து தடுக்கவேண்டும் போன்ற எண்ணங்களை நீண்ட காலமாகவே குறிப்பிட்டு வருகிறார் சாள்ஸ். அவருடைய அந்தக் கோட்பாடுகள், ஈடுபாடு ஆகியவைக்காகவும், ஆரோக்கியத்துகாக வெவ்வேறு விதமான மருத்துவ வழிகளைப் பாவிப்பது பற்றிய ஈடுபாடு ஆகியவற்றுக்காகவும் அவர் பெருமளவில் மதிக்கப்படுகிறார். தனது வீட்டுத் தோட்டத்தில், படம் வரைவதில், நடப்பதில், தூண்டில் போட்டு மீன்கள் பிடிப்பதில் தனக்கு விருப்பம் என்கிறார் சாள்ஸ்.
சாள்ஸ் ஜெ. போமன்