டிரம்ப் நிறுத்திய பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை புதுப்பித்து உத்தரவிட்டார் ஜோ பைடன்.
அமெரிக்காவின் இராணுவப் போர் விமானமான F-16 ஐ பாகிஸ்தானுக்கு விற்பது பற்றிய உத்தரவிட்டதன் மூலம் 2018 இல் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் அமெரிக்காவின் சகா அல்ல என்று தெரிவித்து நிறுத்திய இராணுவ உதவிகள் புதுப்பிக்கப்படுகின்றன. ஜோ பைடன் பாகிஸ்தான் விமானப்படை நாடு எதிர்நோக்கும் தீவிரவாதங்களை எதிர்கொள்வதற்காகவென்று வழங்கவிருக்கும் உதவி 450 மில்லியன் டொலர்கள் பெறுமதியானதாகும்.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கவிருக்கும் 450 மில்லியன் டொலர் உதவியில் F-16 போர் விமானங்களும் அவைகளுக்குத் தேவையான உபகரணங்களும் அடங்கும். தமது நீண்டகால இராணுவக் கூட்டுறவில் இருக்கும் நாடான பாகிஸ்தான் தனது தீவிரவாத ஒழிப்புக் கூட்டுறவுக்கு அவசியம் என்றும் அதனால் அவர்களிடமிருக்கும் விமானப்படையை அதற்காகப் பாவிக்க உதவிகள் செய்யவேண்டும் என்றும் அமெரிக்க வெளிநாட்டு உறவுக் காரியாலயம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் தன்னிடம் ஏற்கனவே இருக்கும் அமெரிக்கப் போர்விமானங்களை இயக்குவதற்கும், பேணுவதற்கும் உதவி நாடியிருப்பதாகவும் கொடுக்கப்படும் உதவிகளில் புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை என்றும் அமெரிக்கா குறிப்பிடுகிறது. அமெரிக்காவின் வெளிநாட்டுக் கோட்பாடுகள், பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்குப் பாகிஸ்தானுடனான கூட்டுறவு பெறுமதி வாய்ந்தது என்று பெந்தகன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
சாள்ஸ் ஜெ. போமன்