“காடுகளையழிப்பதைக் குறைப்பதற்கேற்றளவு சன்மானம்” இந்தோனேசியாவுடன் நோர்வே ஒப்பந்தம்.
உலகின் மழைக்காடுகளில் மூன்றாவது அதிக அளவைக் கொண்ட இந்தோனேசியாவில் விவசாயத்துக்காகவும், ஏற்றுமதிப் பொருட்களுக்காகவும் காடுகளை அழிப்பது சாதாரணமானது. காடுகளை அழிப்பதைத் தடுத்து நிறுத்துவதானால் அதற்கிணையான நிதியுதவி வேண்டும் என்று இந்தோனேசியா பல வருடங்களாகக் கோரி வருகிறது. அப்படியான ஒரு ஒப்பந்தத்தை நோர்வேயுடன் 2010 இல் செய்துகொண்டு அது தனக்குச் சாதகமானதில்லை என்று பின்வாங்கியது இந்தோனேசியா. மீண்டும், அப்படியான ஒரு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டிருக்கிற்து.
படிப்படியாகக் காடுகளை அழித்துவருவதாகக் கூறிவரும் இந்தோனேசியாவுக்கு இந்த ஒப்பந்தத்தின்படி 56 மில்லியன் டொலர்களைக் கொடுப்பதுடன் புதிய ஒப்பந்தத்தை ஆரம்பிக்கிறது. 2016, 2017 ம் ஆண்டுகளில் இந்தோனேசியாவின் காடு அழிப்புகள் குறைக்கப்பட்டதற்கான வெகுமானம் அதுவாகும். அதைத் தொடர்ந்த வருடங்களின் இந்தோனேசியாவின் காடு அழிப்பையும் அளந்தபின்னர் அதற்காகவும் நோர்வே நிதியுதவியை வழங்கும்.
2030 இல் தனது நாட்டில் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் கரியமிலவாயுவின் அளவு 0 ஆகிவிடும் என்கிறது இந்தோனேசியா. நோர்வே அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் காடுகளை அழிப்பதைக் குறைப்பதே தவிர கரியமிலவாயு வெளியேற்றத்தைத் தடுப்பதோ, முழுமையாக அழிப்பை நிறுத்துவதோ அல்ல என்று சூழல் அமைப்புகள் சார்பில் விமர்சிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்