பிரிட்டிஷ் மகாராணிக்காக உம்ரா யாத்திரை செய்தவரை சவூதி அரேபியா கைது செய்தது.
யேமனைச் சேர்ந்த ஒரு நபர் தான் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் ஆன்மாவுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவேண்டும் என்று மெக்காவுக்குப் புனித யாத்திரை செய்திருக்கிறார். அவர் அதைப் படம் பிடித்துச் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்திருக்கிறார். அவரைச் சவூதிய அதிகாரிகள் கைது செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட நபர் தனது யாத்திரையின்போது தனது வேண்டுதலைக் கொடியொன்றில் எழுதித் தூக்கிக்கொண்டு அதைப் படம் பிடித்திருக்கிறார். மெக்காவில் அப்படியான கொடிகள், பதாகைகளை வைத்திருப்பது சட்டத்துக்கு விரோதமானதாகும்.
இன்னொரு முஸ்லீமுக்காக ஒரு முஸ்லீம் உம்ரா யாத்திரிகை செய்வது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பிரிட்டிஷ் மகாராணி முஸ்லீம் அல்லாதவர் மட்டுமன்றி பிரிட்டன் அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவரும் ஆகும். குறிப்பிட்ட சம்பவம் பற்றிச் சவூதிய தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. அந்த நபர் நீதியின் முன்னர் நிறுத்தப்படவிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்