கருச்சிதைவு செய்துகொள்ள முதல், வயிற்றிலிருக்கும் கருவின் சப்தத்தைக் கேள் – ஹங்கேரி.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் நாடுகளில் கருச்சிதைவு கொள்வதைத் தடுக்க விரும்பும் அரசுகளிலொன்று ஹங்கேரி ஆகும். அதற்கான படிகளில் ஒன்றாக அங்கே கொண்டுவரப்பட்டிருக்கும் சட்ட மாற்றங்களில் ஒன்று கருச்சிதைவு செய்துகொள்ள விரும்புபவர் அதைச் செய்ய முன்பு தனது வயிற்றிலுள்ள கருவின் இருதயத் துடிப்புச் சத்தத்தைக் கட்டாயம் கேட்கவேண்டும் என்கிறது.
ஹங்கேரியில் ஆட்சி செய்துவரும் பழமைவாதக் கட்சிகளும், நாட்டின் திருச்சபையும் கைகோர்த்துக்கொண்டு தம்மால் முடிந்தவரை வயிற்றிலுள்ள கருக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றன. நாட்டின் பெண்ணுரிமை, மனிதாபிமான இயக்கங்கள் பல ஒன்று சேர்ந்து அரசின் கருச்சிதைப்புத் தடுப்பு நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பிலும் அதே கோரிக்கை பல தடவைகள் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், சமீபத்தில் நடந்த தேர்தலில் பழமைவாதிகளின் பக்கமே வென்றதால் அரசு தனது நடவடிக்கைகளில் சளைக்காமல் தொடர்கிறது.
12 வாரங்கள் கருத்தரிப்பு வரை கருச்சிதைவு செய்துகொள்ள ஹங்கேரியின் சட்டம் இடம் கொடுக்கிறது. குறிப்பிட்ட சில காரணங்கள் இருப்பின் 24 வாரக் கர்ப்பக்காலம் வரை அதைச் செய்யலாம்.
“கிறிஸ்தவ நாடொன்றில் கருச்சிதைவு மூலம் உயிர்களைக் கொல்ல முடியும் என்பது நாட்டின் பெயருக்கே இழுக்கானது. அதை நிறுத்தவேண்டும்,” என்கிறார் பழமைவாதக் கட்சியின் முக்கிய தலைவரொருவர்.
“தனிப்பட்ட பெண் ஒருவரின் உடலைத் தனது உடமையாக்கலாம் என்று அரசு நினைப்பது, கண்டனத்துக்குரியது,” என்கிறார்கள் மனித உரிமை ஆதரவாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்