ஆர்மீனியாவுக்கு விஜயம் செய்கிறார் அமெரிக்க பாராளுமன்றத்தின் சபா நாயகர் பெலோசி.
ஆஸார்பைஜானுக்கும், ஆர்மீனியாவுக்கும் இடையே இவ்வாரத்தில் ஏற்பட்ட எல்லைப் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 200 எல்லைக் காவலர்கள் இரண்டு தரப்பிலும் இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்படும் அப்பகுதியில் பதட்ட நிலைமை காணப்படுகிறது. முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரமாகித் தனி நாடாகிய பின்னர் முதல் தடவையாக அங்கே அமெரிக்காவின் உயர்மட்ட அரசியல்வாதியாக விஜயம் செய்திருக்கிறார் பாராளுமன்றத்தின் சபாநாயகர் நான்ஸி பெலோசி.
சுமார் மூன்று நாட்களுக்குத் தன்னுடன் வந்திருக்கும் குழுவினருடன் ஆர்மீனியாவில் இருக்கும் பெலோசி நாட்டின் பிரதமர் நிக்கோல் பஷின்யானையும் சந்திக்கவிருக்கிறார். மனித உரிமைகளைப் பேணுவது பற்றியும் அங்கே மேலும் இறப்புக்கள் ஏற்படாமல் தவிர்ப்பதுமே அவ்விஜயத்தின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகிறது.
ரஷ்யாவின் இராணுவப் பாதுகாப்பில் இருக்கிறது ஆர்மீனியா. ஆஸார்பைஜானின் முக்கிய இராணுவத் தளபாட ஏற்றுமதியாளர் ரஷ்யாவாகும். ஆஸார்பைஜானுக்கு உதவிகள் செய்வதாக 1995 இல் அமெரிக்கா ஒப்பந்தம் செய்திருக்கிறது. 2020 இல் ஆஸார்பைஜான் – ஆர்மீனியாவுக்கு இடையே நடந்த எல்லைப் போரில் சுமார் 6,500 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதை நிறுத்த ஆர்மீனியா ரஷ்யாவின் தலையீட்டால் உண்டாக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி தனது நாட்டின் பிராந்தியத்தை விட்டுக்கொடுத்து, அங்கே ரஷ்யாவின் அமைதிப் பாதுகாப்புப் படையையும் தளம் அமைக்க அனுமதித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்