அணுமின்சார உலைகளில் பாவிக்கப்பட்டவையின் எச்சத்தைப் பாதுகாக்கும் இரண்டாவது மையம் சுவிஸுக்காக.
சுவிஸிலிருக்கு ஐந்து அணுமின்சார உலைகளுக்காகப் பாவிக்கப்பட்ட இரசாயண எச்சங்களைப் பாதுகாக்கும் இடமாக Nördlich Lägern தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நகரம் ஜெர்மனி – சுவிஸ் எல்லைக்கு மிக அருகேயிருப்பதால் அந்த முடிவு அந்த நகர் வாழ் மக்களிடையே மட்டுமன்றி எல்லைக்கு அடுத்த பக்கத்தில் வாழும் ஜேர்மனிய நகர்களின் மக்களிடையேயும் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அணுசக்தி பலமாக இருக்கும் அந்த எச்சங்களைப் புதைக்கும் ஆழம் போதுமானதா? அடிக்கடி பூமியதிர்ச்சி ஏற்படும் அப்பிராந்தியத்தில் அது புதைக்கப்பட்டிருப்பது சுற்றியிருக்கும் மக்களுக்குப் பாதுகாப்பானதா? அந்த அணு உலை எல்ல மையம் இருப்பதால் அந்த நகரையும் சுற்றிவர உள்ள பிராந்தியத்தின் கட்டடங்கள் இழக்கப்போகும் மதிப்புக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்படுமா? இப்படியான கேள்விகள் சுவிஸ் எடுத்திருக்கும் முடிவையடுத்து மக்களால் எழுப்பப்படுகின்றன.
இதே நகரம் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இதே காரணத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அது போதுமான பாதுகாப்பற்ற இடமல்ல என்று குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நடந்த ஆராய்ச்சிகளின் பின்னரே கடந்த வாரம் புதிய முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுவிஸ் தனது அணுசக்தி உலைகளின் எச்சங்களைப் பாதுகாப்பதற்கான இடத்தைக் குறிவைத்து சுமார் 50 வருடங்களாக ஆராய்ச்சி செய்திருக்கிறது.
சுவிஸ் எடுத்திருக்கும் முடிவில் ஜேர்மனிக்கும் முழுமையான திருப்தியில்லை. சுவிஸ் அணுசக்தி எச்சங்களைப் புதைக்கப்படவிருக்கும் மையம் கட்டும் வேலைகள் மேலும் 10 வருடங்களின் பின்னரே ஆரம்பிக்கப்படவிருக்கிறது. பீப்பாய்களில் போடப்பட்டுப் புதைக்கப்படும் அவ்வெச்செங்கள் அங்கே சுமார் 100,000 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பாதுகாப்பாக இருக்கும் என்கிறது ஆராய்ச்சி. அதுபற்றிய நகர்வுகளில் தாமும் பங்குபெறவேண்டும் என்று ஜேர்மனி சார்பில் கோரப்பட்டிருக்கிறது.
Nördlich Lägern நகரில் அணுசக்தி எச்சங்கள் பாதுகாக்கப்படும் மையம் அமையுமானால் உலகில் அதேபோன்ற இரண்டாவது மையமாக இருக்கும். இவ்வருடம் பெப்ரவரி மாதம் பின்லாந்து இதேபோன்ற ஒரு மையத்தைத் தனது நாட்டின் மேற்கிலிருக்கும் தீவான Olkiluoto இல் கட்டுவதாக முடிவெடுத்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்