சுவீடன், பின்லாந்தை அடுத்து நாட்டோவை நெருங்கும் நாடாகிறது, சுவிற்சலாந்து.

மரபணுவிலேயே அணிசேராக் கோட்பாட்டைக் கொண்டிருப்பதாகச் சர்வதேச அளவில் அறியப்பட்ட நாடுகளான பின்லாந்தும், சுவீடனும் தமது வழியை மாற்றிக்கொள்ளச் சுமார் அறுபது நாட்கள் தான் ஆகின. அந்த நாட்களின் ஆரம்பம் உக்ரேனுக்குள் ஆக்கிரமிக்க ரஷ்யப் படைகள் புகுந்ததில் ஆரம்பித்தன. அணிசேராக் கொள்கையிலிருந்து மெதுவாக விலக ஆரம்பிக்கும் இன்னொரு நாடாகியிருக்கிறது சுவிற்சலாந்து.

1907 ம் ஆண்டு ஹாக் [Hague Conventions] பட்டயத்திலேயே தன்னை ஒரு அணிசேரா நாடாக அடையாளப்படுத்திக்கொண்ட நாடு சுவிற்சலாந்து. போர்களிலிருந்து ஒதுங்கியிருத்தல், போரிடும் நாடுகளுடன் பாரபட்சமின்றி இயங்குதல், போரிடும் நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்காமலிருந்தல், அவர்களுக்கு உதவத் தமது இராணுவத்தை அனுப்பாதிருத்தல், அவர்கள் தமது பிராந்தியத்தைப் பாவிக்க அனுமதி மறுத்தல் ஆகியவை சுவிற்சலாந்தின் அணிசேராக் கோட்பாடுகளின் வேர்களாக இருந்து வருகின்றன.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பும், பின்லாந்து, சுவீடன் நாடுகள் நாட்டோ அமைப்பை நோக்கிச் சாய்ந்திருப்பதும் சுவிஸ் மக்கள், அரசியல்வாதிகளின் கருத்துகளிலும் தமது நிழலைப் பதித்திருக்கின்றன. நாட்டோ அமைப்பின் அங்கத்துவராகச் சேர சுவிஸ் முடிவு செய்யாவிட்டாலும் கூட வரவிருக்கும் இலையுதிர்காலத்திலேயே சுவிஸ் நாட்டோவுடன் நெருங்கிச் செயற்பட ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது.

சுவிஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு நாட்டுக்கான ஒரு புதிய வெளிவிவகாரக் கோட்பாட்டை ஆராய்ந்து வடிவமைத்துக்கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் வெளியாகவிருக்கும் அவ்வறிக்கையின் சாராம்சம் சுவிற்சலாந்து “நாட்டோ அமைப்புடன் நெருங்கி ஒத்துழைக்கும்படி பரிந்துரை செய்யும்,” என்று பாதுகாப்பு அமைச்சர் வயோலா அர்ம்ஹேர்ட் நேர்காணல் ஒன்றில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

நாட்டு மக்களிடையே நாட்டோ அமைப்பில் சுவிஸ் சேரவேண்டும் என்ற ஆதரவு உக்ரேன் போருக்கு முன்னர் இருந்ததை விடப் 10 % ஆல் அதிகரித்திருக்கிறது. மூன்றிலொரு பகுதிக் குடிமக்கள் சுவிஸ் நாட்டோ அங்கத்துவராகவேண்டும் என்று கருதுவதாகச் சமீபத்தில் வெளியாகிய கருத்துக் கணிப்பொன்று குறிப்பிடுகிறது.

சுவிஸ் தவிர அயர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளும் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிப்பவை. அவ்விரு நாடுகளிலும் ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்போ, சுவீடன், பின்லாந்து நாடுகளின் நாட்டோ விண்ணப்ப முடிவோ நாட்டோவிடம் சாயுமளவிற்கான தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்கின்றன கருத்துக் கணிப்பீடுகள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *