“நாம் எவருடன் தொடர்புகள் வைத்துக்கொள்ளவேண்டுமென்று எவரும் சட்டம் போடலாகாது,” என்கிறார் தென்னாபிரிக்க ஜனாதிபதி.
ஐரோப்பிய நாடுகளில் தமக்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டதால் தமக்குச் சாதகமான ஆபிரிக்க நாடுகளில் அரசியல், பொருளாதார, வர்த்தகத் தொடர்புகளை இறுக்கிக்கொள்ளும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்காக எப்படியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது பற்றிய ஒரு சட்டம் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் மே மாதத்திலேயே போடப்பட்டிருக்கிறது. அதைச் சாடியிருக்கிறார் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா.
அமெரிக்காவில் ஜோ பைடனைச் சந்தித்துவிட்டு, லண்டனுக்கு மகாராணியின் இறுதி யாத்திரிகையில் பங்குபற்றுவதற்காகத் தென்னாபிரிக்க ஜனாதிபதி பயணமாகிறார். ஜோ பைடனைச் சந்தித்தபின் அவர் பத்திரிகையாளர்களுடன் பேசியபோது ஆபிரிக்க நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்புகளை வைத்துக்கொள்வதை அமெரிக்கா தடுக்க முற்படுவது அந்த நாடுகளின் வளர்ச்சிகளைப் பாதிக்கும் என்று சுட்டிக் காட்டினார்.
அதேசமயம் அந்த நாடுகள் தத்தம் முன்னேற்றத்துக்காக எவருடன், எப்படியான தொடர்புகளை உண்டாக்கிக்கொள்ளவேண்டுமென்று வேறெவரும் எல்லைகள் போடலாகாது என்றும் கண்டித்தார். ரஷ்யாவுடன் நெருக்கமாகும் நாடுகளை அமெரிக்கா சார்பில் ஒதுக்குவதற்காக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் சட்டத்தின் விபரங்கள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்