எரிசக்தி விலையுயர்ந்ததால் அரையாண்டில் 12 பில்லியன் இழந்த நிறுவனத்தை வாங்கியது ஜேர்மனிய அரசு.
ஜேர்மனியின் எரிசக்திச்சந்தையில் மிக முக்கிய நிறுவனமான Uniper ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பு ஆரம்பித்ததும் பெரும் நஷ்டத்தில் இயங்கிவந்தது. Uniper ரஷ்ய எரிவாயுவை மலிவு விலைக்கு வாங்கி அந்த நிறுவனம் ஜேர்மனியின் தொழிற்சாலைகளுக்கு விற்றுப் பெரும் இலாபத்தில் இயங்கிவந்தது. ரஷ்ய ஆக்கிரமிப்பை ஜேர்மனி எதிர்த்ததால் ரஷ்யா ஜேர்மனிக்குக் கொடுத்துவந்த எரிவாயுவைக் குறைக்க ஆரம்பித்ததால் வேறு இடங்களில் அதிக விலைக்கு வாங்கி ஜேர்மனியில் விற்கவேண்டிய நிலைமைக்கு உள்ளான அந்த நிறுவனத்தின் பெறுமதிக்கு ஜூலை மாதத்தில் ஜேர்மனிய அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. சமீபத்தில் ரஷ்யா ஜேர்மனிக்குக் கொடுத்துவந்த எரிவாயுவை முற்றாகவே நிறுத்திவிட்டது. அதனால் Uniper மேலும் அதிக நட்டத்திலேயே இயங்கவேண்டியதாயிற்று.
பின்லாந்தின் Fortum நிறுவனமே Uniper இன் 70 விகிதத்துக்கும் அதிகமான பங்குகளுக்குச் சொந்தக்காரர்களாகும். 2018 இல் 50 விகித பங்குகளையே கொண்டிருந்த Fortum ஜேர்மனியில் அச்சமயத்தில் இலாபம் அதிகரிக்கவே மிக வேகமாகத் தனது பங்குகளின் விகிதத்தை அதிகரித்திருந்தது. 2020 இல் 1.3 பில்லியன் எவ்ரோ வரை இலாபமடைந்த அந்த நிறுவனம் 2021 இல் 2.5 பில்லியன்களை ஈட்டியது. ஆனால், போர் ஆரம்பித்ததிலிருந்தே நஷ்டம் ஆரம்பிக்க அந்த நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பும் பெருமளவில் காணாமல் போய்விட்டது.
தொடர்ந்தும் நட்டமே அதிகரிக்கும் என்ற நிலையில் Fortum தனது ஜேர்மனிய நிறுவனமான Uniper ஐ திவாலில் போகவிடலாமா என்ற நிலைமைக்கு உள்ளாகியது. அதன் பக்கவிளைவோ ஜேர்மனியின் தொழில்துறையை, தயாரிப்பு நிறுவனங்களைப் பெருமளவில் பாதிப்பதாக இருக்கும். எரிசக்தியின்மையால் ஜேர்மனியின் பொருளாதாரமே ஆட்டம் காணக்கூடிய விளைவை நாட்டின் அரசு ஏற்றுக்கொள்ள முடியாது.
தினசரி 130 மில்லியன் எவ்ரோக்களை இழந்துவரும் Uniper நிறுவனத்தைத் தாமே வாங்கிக்கொள்வதாக வேறு வழியின்றி புதன் கிழமையன்று ஜேர்மனிய அரசு அறிவித்திருக்கிறது. அதன் மூலம் நிறுவனத்தின் 98.5 % ஐ ஜேர்மனிய அரசு வாங்கிக்கொள்ளும். சாதாரணமாக நிறுவனங்கள் திவாலில் போகும்போது அரசுகள் குறுக்கிடுவதைக் கடுமையாக எதிர்க்கும் கோட்பாடு கொண்ட ஜேர்மனி தனது நாட்டின் எரிசக்தித் தேவைக்கு முட்டுக்குடுக்க அந்த நிறுவனத்தில் சுமார் 30 பில்லியன் எவ்ரோக்களை மேலும் முதலீடு செய்யவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்