“உலகம் மிகப்பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் சமயத்தில் பொதுச்சபை ஒன்றுகூடுகிறது,” குத்தேரஸ்.
கொவிட் 19 தொற்றுக்காலத்தின் பின்னர் இரண்டு வருடங்களுக்குப் பின்னர், முதல் தடவையாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். நியூ யோர்க்கில் ஒன்றுகூடியிருக்கும் அவர்களின் முன்னாலிருக்கும் அதி முக்கியமான பிரச்சினை உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போராகும். இரண்டாம் உலகப் போரின் அழிவுகளின் சாம்பலிலிருந்து உண்டாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை இப்போது அணுஆயுதபாணியான ஒரு நாடு தனது பக்கத்து நாட்டைத் தாக்கும் சமயத்தில் கூடியிருப்பதைச் சுட்டிக்காட்டி, “உலகம் மிகப்பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் சமயத்தில் பொதுச்சபை ஒன்றுகூடுகிறது,” என்று உலக மகாசபையின் பொதுக்காரியதரிசி அந்தோனியோ குத்தேரஸ் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
“உலகின் மிக ஏழையான மக்களின் தோள்களில் அதிகரித்துவரும் உணவு மற்றும் எரிசக்தி விலைகள் பாரமாக்கிவரும், அதே நேரத்தில் பரவலான தேசியவாதம் மற்றும் சுயநலம் ஆகியவை அதே வேகத்தில் பரவி இந்தச் சவால்களில் எல்லோரும் ஒத்துழைப்பதை கடினமாக்குகின்றன,” என்று குறிப்பிடும் குத்தேரஸ் மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பிளவு பெரியதாகியிருப்பதையும், சீனாவும் தன் பலத்தைக் காட்டும் எண்ணத்துடன் இருப்பதையும் விசனத்துடன் கோடிட்டுக் காட்டினார்.
திங்களன்று லண்டனில் நடந்த மகாராணியின் இறுதி யாத்திரை நியூ யோர்க்கில் ஐ.நா சபைப் பொதுக்கூட்டத் திட்டத்தின் நிகழ்ச்சி நிரல்களில் தனது நிழலைப் பலமாகக் காட்டியிருக்கிறது. பெரும்பாலான உலகத் தலைவர்கள் லண்டனில் இறுதி யாத்திரையில் பங்குபற்றிய பின்னர் நேரடியாக நியூ யோர்க்குக்குப் பயணிக்கிறார்கள். அதன் விளைவாக ஐ.நா-வின் பொதுக்கூட்டம், அதைச் சுற்றித் திட்டமிடப்பட்டிருந்த உலகத் தலைவர்களின் சந்திப்புகள் எல்லாவற்றின் நேரம், போக்குவரத்து வசதி, இடங்கள் ஆகியவற்றுக்கும் கடும் அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றது. கடைசி நேரம் வரை பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
ரஷ்யா – உக்ரேன் போர் தவிர உலகில் காலநிலை மாறிவருவதால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்டு வரும் அழிவுகளைத் தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா- வின் அங்கத்துவ நாடுகள் கருத்தரங்குகளில் பங்குபற்றி வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்