மகாராணியின் மரணத்துக்கான அஞ்சலி நாளில் ஆஸ்ரேலியாவில் பிரிட்டிஷ் அரசகுடும்பத்துக்கெதிரான குரல்கள்!
“முடியாட்சியை ஒழித்துக் கட்டுவோம்!” போன்ற கோஷங்களுடன் நூற்றுக்கணக்கானோர் வியாழனன்று ஆஸ்ரேலியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து ஆஸ்ரேலியா விலகிக்கொள்ளவேண்டுமென்று குரல்கொடுக்கிறார்கள். மகாராணி எலிசபெத் II இன் மறைவை நினைவுகூரும் மூலமாக ஆஸ்ரேலிய அரசு வியாழக்கிழமையைப் பொது விடுமுறை தினமாக அறிவித்திருந்தது. அச்சமயத்தில் நாட்டைச் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் கைப்பற்றிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆஸ்ரேலியப் பழங்குடிமக்களுக்கு இழைத்த இன்னல்களை ஞாபகப்படுத்தி அந்தக் கறையைப் போக்கிக்கொள்வது அவசியமென்கிறார்கள் குடியரசு ஆதரவாளர்கள்.
“இந்த முடியாட்சி அனுதாபம் தெரிவிப்பதற்கு அருகதை இல்லாதது,” “முடியாட்சிக்குச் சொந்தமானவர்கள் எங்களுடன் தமக்கான கொடுக்கல் வாங்கல்கள் முடியவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்,” “நாட்டின் உரிமையாளர்களான பழங்குடி மக்கள் தொடர்ந்தும் பல இடங்களில் தமக்குச் சொந்தமான நிலப்பகுதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்,” போன்ற பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அடியுடன் வெறுக்கும் பலரின் வாக்குமூலங்களை சிட்னியிலிருக்கும் விக்டோரியா மகாராணி சிலைக்கருகேயிருந்து ஆரம்பித்துத் தமது எதிர்ப்பைக் காட்டுபவர்களிடையே நிருபர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.
ஆஸ்ரேலியாவில் சுமார் 65,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தவர்கள் அங்குள்ள வெவ்வேறு பழங்குடியினர். 1788 இல் அங்கே நுழைந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவர்களிடமிருந்து மிருகத்தனமாக நாட்டைப் புடுங்கியது. அதன் பின்னர் சுமார் 200 வருடங்களாக அவர்கள் மீது கொடுமைகள் பல கட்டவிழ்த்து விடப்பட்டு அவர்களின் அடையாளங்கள் புடுங்கப்பட்டன.
பிடிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் தொடர்ந்தும் இருந்துவரும் ஆஸ்ரேலியாவிலிருக்கும் முடியாட்சியின் பிரதிநிதி டேவிட் ஹேர்லி கான்பெராவில் நடந்த மகாராணியின் அஞ்சலி தின உரையில் ஆஸ்ரேலியர்களில் ஒரு பகுதியான பழங்குடி மக்களின் விசனங்கள் பற்றிக் குறிப்பிட்டார். “ஆஸ்ரேலியாவின் முதல் குடிமக்களான பழங்குடிகள் பலரின் வாழ்வு காலனித்துவத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் கருத்தில் கொண்டு அவர்களின் எண்ணங்களை மதிக்கிறேன். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அவர்களுக்குச் செய்யப்பட்ட அநீதிகள், கொடுமைகள் போன்றவைக்கான நல்லிணக்க சம்பாஷணை ஒரு நீண்ட பாதையாகும். ஒன்றுசேர்ந்து நாம் அதில் பயணிக்கவேண்டியது அவசியம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்ரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் நாட்டைக் குடியரசாக்குவதையும், பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழிலிருந்து நாட்டை விலக்குவதையும் தனது கோட்பாடாகக் கொண்டவர். சமீபத்தில் பதவியேற்றிருக்கும் அவர் மகாராணி இறந்திருக்கும் சமயத்தில் குடியரசு பற்றிய வாதப் பிரதிவாதங்களைப் பாராளுமன்றத்தில் எழுப்பப்போவதில்லை என்று உறுதிபூண்டிருக்கிறார். ஆயினும் தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி தனது ஆட்சியின் முதல் மூன்று வருடங்களுக்குள் அதுபற்றிய முடிவுகளை எடுப்பதாகத் தொடர்ந்தும் உறுதிபூண்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்