தன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்!

பெண் குருவிகளை வசப்படுத்துகின்ற பாடலை ஆண் சிட்டுக்கள் மறந்து விட்டன. அதனால் ஆண் சிட்டுகளுக்கு காதல் பாடல் சொல்லிக் கொடுப்பதற்கு அறிவியலாளர்கள் முயற்சிக்கின்றனர்.

வாழ்விடங்கள் அல்லது வாழ்வதற்கான சூழல் பறிக்கப்படுவதால் பறவை இனங்கள் பலவும் அருகி, மறைந்து வருகின்றன. அவற்றின் பண்பாடுகள் இழக்கப்படுகின்றன. honeyeater எனப் படுகின்ற சின்னஞ்சிறு தேன் உண்ணும் சிட்டுக்கள் ஆஸ்திரேலியாவில் காணப்ப டுகின்ற அரிய பறவை இனங்களில் ஒன்று. அவை உலகில் இருந்து முற்றாக அழிந்து போகின்ற ஆபத்தில் இருக்கின் றன.

மஞ்சள், கறுப்பு வண்ணம் கொண்ட இந்தக் குருவிகள் பூமியில் ஆக முந்நூறு மட்டுமே உயிர்வாழ்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Honeyeater சிட்டுக்களில் ஆண்பறவைகள் பாடுவதை மறந்து அவற்றின் பண்பாட்டை இழந்துவிட்டன என்பதை சூழல் அறிவியலாளர்கள் நீண்ட நாள் ஆராய்ச்சியின் பின்னர் கண்டறிந்துள்
ளனர்.

ஆண் குருவிகளின் பாடல் கேட்டே அவற்றின் மீது மையல் கொண்டு பெண் குருவிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. பெண் குருவிகளுக்கு மட்டுமே புரிகின்ற அந்த வித்தியாசமான பாடலை ஆண் குருவிகள் மறந்துவிட்டதால் பெண் சிட்டுக்கள் அவற்றை நெருங்குவதில்லை இதனால் இனப்பெருக்கம் தடைப்பட்டு அவற்றின் இனம் அருகி அழிந்து வருகின்றது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

“பொதுவாக ஆண் குருவிக் குஞ்சுகள் தந்தையிடம் இருந்தே பாடக் கற்றுக் கொள்கின்றன. தந்தைக் குருவி நேரகாலத்துடன் கூட்டை விட்டு வெளியேறிவிடுவதாலும் அல்லது இறந்து விடுவதாலும் குஞ்சுகள் பாடல் கற்றுக்கொள்ளத் தவறிவிடுகின்றன என்பது அவதானிப்புகளில் தெரிய வந்துள்ளது.”-என்பதை உயிரியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பறவைகளின் சூழலில் பாடலை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்வதன் மூலம் அவற்றை பாடுவதற்குத் தூண்ட முடியும் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தின் (Australian National University) அறிவியலாளர் ஒருவர் கூறுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பறவைக ளின் பாடும் திறனையும் இனப்பெருக்க கத்தையும் அவதானித்து ஆராய்ச்சி செய்து வருகின்றார் டாக்டர் ரோஸ் கிரேட்ஸ்(Dr Ross Crates).

“மனிதர்களைப் போன்றே சில பறவை களும் அடுத்தவர் மூலம் கற்றுக் கொள் கின்ற ஆற்றலைக் கொண்டுள்ளன. கேட்பதன் மூலம் பாடல் பயிற்சியை பெற்றுக்கொள்ள பறவைகளால் முடியும். அவற்றின் பண்பாட்டைத் தக்கவைக்கும் இதுபோன்ற முயற்சிகள் மூலம் அரிய உயிரினங்களின் அழிவைத் தடுக்க முடியும்” – என்று அவர் நிச்சயமாகக் நம்புகிறார்.

சிட்டுக் குருவிகள் வாழ்கின்ற சூழலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவற்றின் பாடலை ஒலிக்கவிடுவதன் மூலம் அவற்றின் நினைவில் பதியச் செய்து அருகி வரும் பாடல் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கும் பழக்கப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“Royal Society B” என்ற உயிரியல் ஆராய்ச்சி சஞ்சிகையில் இந்த வாரம் இடம்பெற்ற குருவிகளின் காதல் பாடல் தொடர்பான இத்தகவலை உலக ஊடகங்கள் பலவும் செய்திகளாக வெளியிட்டிருக்கின்றன. மார்ச் 20 ஆம் திகதி உலக சிட்டுக்கள் தினமாகும்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *