ஆஸ்ரேலியாவில் கடும் மழை, வெள்ளங்களுக்குக் காரணம் விமான ஓட்டிகளே என்று அவர்களை மிரட்டுகிறது ஒரு கூட்டம்.

சமீப மாதங்களில் ஆஸ்ரேலியாவின் வெவ்வேறு பாகங்களிலும் வழக்கத்துக்கு மாறான கடும் மழையும் அதையொட்டிய வெள்ளங்களும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. பல நடப்புக்களுக்குப் பின்னால் ஒரு சதித்திட்டமும், இரகசியக் குழுவும் இருப்பதாகக் கதை பரப்பும் சிலர் அதற்கான காரணம் சில விமான ஓட்டிகள் என்று குற்றஞ்சாட்டி வருகிறார்கள். குறிப்பிட்ட நிறுவனமொன்றின் விமான ஓட்டிகள் நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மேலாகப் பறந்து முகில்களை மழையாக்கும் இரசாயணத்தைத் தூவியதாலேயே கடும் மழை நியூ சவுத் வேல்ஸ் பகுதியைத் தாக்கியதாக அவர்கள் இணையத்தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

பல நாட்களாகத் தொடரும் மழை, வெள்ளத்தால் ஆஸ்ரேலியாவில் 17 பேர் இறப்பு. – வெற்றிநடை (vetrinadai.com)

 Handel Aviation என்ற நிறுவனத்தைச் சேர்ந்த விமானியொருவர் குறிப்பிட்ட விமானமொன்றில் மழை, வெள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு மேலாகப் பறந்ததாகப் படங்களும் பகிரப்பட்டன. சில பிரபலங்களும் குறிப்பிட்ட விமானி முகில்கள் மீது இரசாயணம் தூவி மழை பெய்ய வைக்கவே பறந்ததாகத் தமது பதிவுகளில் பரப்பியிருந்தனர். 

 Handel Aviation நிறுவனம் வேறு நிறுவனங்கள், அதிகாரங்களின் தேவைக்காக வான்வெளியிலிருந்து படங்கள் எடுப்பன என்று அந்த நிறுவன நிர்வாகி பதிலழித்திருக்கிறார். ஆஸ்ரேலியாவில் ஏற்பட்டு வரும் காலநிலைத் தாக்குதல்களின் விபரங்களை அறிந்து அவை எப்படியான வழியில் நகர்கின்றன போன்ற விபரங்களைத் தெரிந்துகொண்டு மக்களுக்கு அறிவிக்கும் காலநிலை நிலையங்களுக்காகத் தாம் படங்கள் எடுத்து வருவதாக அந்த நிர்வாகி மேலும் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்தின் விளக்கத்தின் பின்னரும் அதில் வேலை செய்யும் விமான ஓட்டிகள் நூற்றுக்கணக்கான மிரட்டல்களை எதிர்கொண்டதாகத் தெரியவருகிறது. உயிருக்கு ஆபத்துண்டாக்குவதாகக் குறிப்பிடும் ஒரு பகுதி மிரட்டல்கள் மிகவும் பாரதூரமானவை என்றும் அதனால் நிறுவனத்தின் ஊழியர்களில் ஒரு சாரார் மன உழைச்சலாலும், பயத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார். தம்மிடம் வரும் கருத்துகளுக்குப் பதிலை விபரமாகத் தொலைபேசி மூலமும், அஞ்சல்கள் மூலமும் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *