18 வயதுப் பெண்ணுடன் இரகசிய உறவு வைத்திருந்ததால் நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகினார்.

ரஷ்யா – உக்ரேன் போர் நிலைமையில் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் முக்கிய ஆலோசனைகளில் பங்குபற்றி முடிவுகள் எடுத்துவரும் சமயத்தில் நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் ஒட் ரோகர் எனொக்சன் பதவி விலகினார். 2005 இல் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் ஒரு 18 வயதுப் பெண்ணுடன் இரகசிய உறவு வைத்திருந்ததை அப்பெண் தினசரி ஒன்றுக்குப் பேட்டியளித்ததை அடுத்தே அவர் பதவி விலகவேண்டியதாயிற்று.

“நான் அச்சமயத்தில் மனதால் பலவீனமான நிலையிலிருந்தேன். இளவயதும், அரசியலில் ஈடுபடும் ஆர்வமும் உள்ள நான் என்னைப் பற்றித் தாழ்மையான மதிப்பையே கொண்டிருந்தேன். அதை அமைச்சர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்,” என்று அப்பெண் பேட்டியளித்திருக்கிறார்.

தற்போது 67 வயதான எனொக்சன் அப்பெண்ணின் கல்லூரி வகுப்பினரைப் பாராளுமன்ற உறுப்பினராகச் சந்தித்தபோதே அவர்களுக்கிடையே அறிமுகம் உண்டாயிற்று. எனொக்சனுக்கு அச்சந்தர்ப்பத்தில் ஒரு மனைவி இருந்தார். சுமார் ஆறு மாதங்களாக அவர்களிடையே உறவு தொடர்ந்தது. எனொக்சன் அச்சமயத்தில் நாட்டின் எரிசக்தி அமைச்சராகவும் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார்.

“’நான் அந்தச் சந்தர்ப்பத்தில் பல தவறான முடிவுகளை எடுத்துப் பலருக்கும் இடைஞ்சல்களை உண்டாக்கியிருந்தேன். அதற்காக முழு மனதுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டிருக்கிறார் பதவி விலகிய அமைச்சர்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *