கியேட்ரும் களிமண்சரிவுப் பிராந்தியத்தில் மீட்புப் பணிகள் கைவிடப்பட்டன.

டிசம்பர் 30 அதிகாலையில் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து சுமார் முப்பது கி.மீற்றர் தூரத்திலிருக்கும் கியேட்ரும் [Gjerdrum] நகரில் உண்டாகிய சேற்றுமண் இடிபாடு மேற்கொண்டு எவரையும் உயிரோடு காப்பாற்ற இயலாது என்று நோர்வே பொலீஸ் அறிவித்தது. 

https://vetrinadai.com/news/gjedrum-norway-landslide/

நோர்வேயின் சமீபகாலச் சரித்திரத்தில் காணாத அந்த மோசமான இயற்கை அழிவில் மக்கள் வசிக்கும் மாடிவீடுகள் 15 இடிபாடுகளுக்குள் மாட்டிச் சிதைந்தன. 5 வீடுகள் நிலத்தில் ஏற்பட்ட ஓட்டைக்குள் வீழ்ந்துவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. 5 ம் தேதி செவ்வாயன்று மீண்டும் அப்பிராந்தியத்தில் மண்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சுமார் 400 மீற்றர் ஆழத்திற்கு வீழ்ந்துவிட்டன. அதிர்ஷ்டவசமாக திங்களன்றே மேற்கொண்டு எவரையும் உயிருடன் காப்பாற்ற இயலாது என்றும் அப்பகுதியில் மேற்கொண்டும் சரிவுகள் ஏற்படக்கூடுமென்று எச்சரிக்கப்பட்டதாலும் பாதுகாப்புப்படையினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

அப்பிராந்தியத்தில் சில வாரங்களாகவே தொடர்ந்து பெய்துகொண்டிருந்த பனிகலந்த மழையால் பாரமாகிவிட்ட நிலப்பரப்பு முழுவதுமாகக் கீழே இறங்கி அங்கே ஒரு இருட்டான கிடங்கை ஏற்படுத்தியிருக்கிறது. அதைச் சுற்றியிருந்த வீடுகளும் ஒவ்வொன்றாக அக்கிடங்குக்குள் சரியவோ விழவோ செய்ததால் பல தடவைகள் சுமார் 400 மீற்றர் கீழே பாதுகாப்புப் படையினர் இறக்கப்பட்டுக் காப்பாற்றும் வேலையில் சுமார் ஒரு வாரமாக ஈடுபட்டு வந்தனர்.

காப்பாற்றும் பணிகள் நடந்த் அதே சமயத்தில் சுமார் 1,500 பேர் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். ஆரம்பத்தில் ஒரு டசின் பேராவது காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்டது.

உயிரோடு காப்பாற்றப்பட்டவர்களைத் தவிரப் 10 பேரைக் காணவில்லையென்றும் அவர்கள் யாரென்றும் அடையாளம் கண்டுபிடித்ததாகவும் தெரிந்துகொண்டபின் அவர்களை உயிரோடு தேடிக் காப்பாற்றும் முயற்சி தோல்வியாகவே தொடர்ந்தது. ஒவ்வொன்றாக ஏழு இறந்த சடலங்கள் மட்டுமே அப்பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. 

தொடர்ந்தும் மூன்று பேர்களைக் காணாத நிலையிலேயே காப்பாற்றும் படையும், பொலீசாரும் அங்கு நிலவும் ஆபத்தான நிலைமையில், எவரும் தொடர்ந்தும் அங்கே உயிரோடிருக்கச் சந்தர்ப்பம் இல்லையென்று கணித்துத்  கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *