இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் சேர்ந்திருந்து திரும்பி வந்த பெண்ணுக்கு நோர்வேயில் மூன்றரை வருடச் சிறைத் தண்டனை.

நோர்வேயிலிருந்து துருக்கி வழியாகச் சிரியாவுக்குச் சென்று அங்கே இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காக மிலேச்சத்தனமான போரிலீடுபடும் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருந்த நோர்வேக் குடியுரிமையுள்ள பெண்ணுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் மூன்று வருடங்கள், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. அந்த 30 வயதுப் பெண் 2020 இல் சிரியாவின் அல்- ஹோல் முகாமிலிருந்து தனது இரண்டு பிள்ளைகளுடன் திரும்பி வந்திருந்தார்.

https://vetrinadai.com/news/al-hol-prison-camp-syria-kurdish/

பாகிஸ்தான்- நோர்வே பெண்ணான அவர் 2013 – 2019 வரை இஸ்லாமியத் தீவிரவாத இயக்கத்துடன் சேர்ந்திருந்திருந்து அவரது முதல் கணவன் இறந்தபின் அவ்வியக்கத்தினரின் பணத்தில் வாழ்ந்திருக்கிறார். அதன் பின்னரும் இரண்டு தடவை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர் திரும்பிவந்தபோது கூட்டிவந்த இரண்டு குழந்தைகளிலொன்று மிகவும் கடுமையான சுகவீனமுள்ளதாகும்.

ஐ.எஸ் இயக்கம் தனது கட்டுப்பாட்டிலிருந்த பிராந்தியத்தில் வாழ்ந்த அப்பெண் நோர்வேக்குத் திரும்பியவுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் சிரியாவில் வாழ்ந்தது சொந்த விருப்பத்திலா, அவரது ஐ.எஸ் இயக்கத்துடனான தொடர்பு தெரிந்தே செய்யப்பட்டவையா என்பவை பற்றியே நடந்த வழக்கு பெரும்பாலும் மையம் கொண்டிருந்தது. 

அந்தப் பெண் வீட்டிலிருந்து குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு கணவனுக்கு ஊக்கம் கொடுத்து, தீவிரவாதிகளுக்கு ஊக்கம் கொடுத்ததன் மூலம் தீவிரவாதச் செயல்களைச் செயல்களுக்கு உடந்தையாக இருந்தாள், கணவன் இறந்த பின்னரும் தெரிந்தே அங்கு தொடர்ந்தும் இருந்து அவ்வியக்கத்தினருக்கு ஆதரவளித்தாள் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்தது. அதனால், அவளுடைய நடத்தைகளுக்கு அவளே பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்குக் காரணமாகக் கூறியது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *