நீண்ட காலத்துக்குப் பின்னர் யேமனில் ஒரு சமாதான முயற்சி வெற்றிபெற்றிருக்கிறது.

யேமனில் 2016 க்குப் பின்னர் முதல் தடவையாக ஐ.நா அமைப்பின் திட்டப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. முழுவதுமாக நாட்டை ஆளாவிட்டாலும் யேமனின் ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டு வந்த அப்து – ரப்பு மன்சூர் ஹாதி தனது அதிகாரங்களையெல்லாம் ஒரு குழுவிடம் ஒப்படைத்துவிட்டுப் பதவி விலகியதாக அறிவித்தார். ஐ.நா-வால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இரண்டு மாதப் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் என்ற முயற்சியின் முதலாவது வாரத்தில் இது நடந்திருக்கிறது.

மூன்று பகுதியாகப் பிரிந்தும், சவூதி அரேபியா, எமிரேட்ஸ், ஈரான் ஆகிய நாடுகளின் மூக்கு நுழைப்புகளுடனும் “எல்லோருடனும் எல்லாரும் போர்” என்ற நிலைப்பாட்டில் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கும் நாடு யேமன். பதவி விலகியிருக்கும் ஹாடி 2012 இல் நாட்டில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியை எதிர்கொள்ள உண்டாக்கப்பட்ட 2 வருடத் தற்காலிக அரசின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவராகும். 2014 இல் ஈரான் ஆதரவுடன் ஹூத்தி இயக்கத்தினர் நாட்டின் தலைநகரான சனாவைக் கைப்பற்றியதும் ஹாடி அங்கிருந்து தப்பியோடினார். அதையடுத்து நாட்டில் ஆரம்பித்த போர் இதுவரை நிறுத்தப்படவில்லை. 

ஹூத்தி இயக்கத்தினரின் யேமன் தலைநகர் மீது சவூதிய விமானங்கள் குண்டு மழை. – வெற்றிநடை (vetrinadai.com)

ஹாடி பதவி விலகியதை அடுத்து சவூதி அரேபியாவும், எமிரேட்சும் சேர்ந்து 3 பில்லியன் டொலர் பெறுமதியான உதவியை யேமனை மீண்டும் கட்டியெழுப்பக் கொடுப்பதாக அறிவித்திருக்கின்றன. அத்துடன் மற்றைய உலக நாடுகளின் உதவியையும் பெற்றுக்கொள்ளும் மாநாடு ஒன்றையும் ஒழுங்குசெய்யவிருக்கிறது சவூதி அரேபியா.

நடைபெறும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஹூத்தி இயக்கத்தினர் தவிர யேமனில் போரில் ஈடுபட்ட மற்றைய பகுதிகள் மட்டுமே பங்குபற்றுகின்றன.

ஏப்ரல் 2 ம் திகதியன்று முஸ்லீம்களின் நோன்பு மாதத்தின் முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ஹூத்தி இயக்கத்தினரும் போர் நிறுத்தத்துக்குச் சம்மதித்திருக்கிறார்கள். ஹான்ஸ் குருன்பெர்க் என்ற ஐ.நா-வின் சமாதானப் பேச்சுவார்த்தைத் தூதுவர் இப்பேச்சுவார்த்தைகளை இயக்கி வருகிறார்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *