போருக்கு எதிரான எதிர்ப்பு ரஷ்யாவெங்கும் பரவியது. எதிர்ப்பைப் பகிரங்கமாகக் காட்டியவர்கள் பலர் கைது!
புதனன்று காலையில் ரஷ்ய ஜனாதிபதி நாட்டின் இராணுவத்தினரில் ஒரு பகுதியினரைப் போருக்குத் தயாராகுமாறு தொலைக்காட்சியில் தெரிவித்தார். உக்ரேனில் நடக்கும் போரை இதுவரை, “‘பிரத்தியேக இராணுவ நடவடிக்கை” என்று மட்டுமே குறிப்பிட்டு ரஷ்யா போரெதிலும் ஈடுபடவில்லை என்றே புத்தினும் ரஷ்ய ஆட்சியாளர்களும் குறிப்பிட்டு வந்தனர். பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட விபரங்களில் உக்ரேனுடன் மட்டுமன்றி மேற்கு நாடுகளெல்லாவற்றுடனுமே ரஷ்யா போரில் இறங்கவேண்டுமென்று குறிப்பிட்டது மக்களை அதிரவைத்து நாடெங்கும் கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது.
புத்தினின் போர் அறைகூவலையடுத்து ரஷ்யர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கின்றனர். ரஷ்யாவிலிருந்து நேரடியாக வெளிநாடு செல்லும் விமானச் சேவைகளெல்லாவற்றிலும் பயணச்சீட்டுக்கள் படு வேகமாக விற்பனையாகித் தீர்ந்ததாக அவற்றை விற்கும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இணையத்தளத்தில் ரஷ்யர்களால் பெருமளவில் தேடப்பட்ட பதம், “ரஷ்யாவிலிருந்து வெளியேறுவது எப்படி?” என்ற கேள்வியாக இருந்தது என்றும் தெரியவருகிறது. ஜியோர்ஜியா, துருக்கி, ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே ரஷ்யாவிலிருந்து தற்சமயம் விமானங்கள் நேரடியாகப் பயணிக்கின்றன.
போரை எதிர்த்து ரஷ்யாவின் பல நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடிய எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து வருவதாகத் தெரியவந்திருக்கிறது. செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் “போரை நிறுத்து,” என்று கூக்குரலிடுபவர்களைப் பொலீசார் இழுத்துச் செல்லும் காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியிருக்கின்றன. ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைதாகியிருப்பதாக ரஷ்ய அரசின் செய்திகள் குறிப்பிடுகின்றன.
ரஷ்யாவின் அரச வழக்கறிஞர்கள் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் மக்களை ஒன்றுகூடி இராணுவத்துக்கு எதிரான குரலெழுப்பலாகாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. உக்ரேன் போர் ஆரம்பித்த பின்னர் அப்படியான குற்றத்துக்கு ஒருவருக்கான சிறைத்தண்டனை 15 வருடங்கள் வரை விதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்