ரஷ்ய அரசியலமைப்புச்சட்டம் கோருவது போல நாட்டு நிலைமை பற்றி புத்தின் வருடாந்திர உரையை நிகழ்த்தினார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரின் ஒரு வருட நிறைவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்பு ரஷ்யாவின் நிலைமை பற்றிய உரையை ஜனாதிபதி புத்தின் பெப்ரவரி 21 ம் திகதி செவ்வாயன்று நிகழ்த்தினார். இதுவரை குறிப்பிட்டு வந்தது போல,  மேற்கு நாடுகளும், உக்ரேனும் சேர்ந்து ரஷ்யா மீது போரை ஆரம்பித்தாகவும் ரஷ்யா அதை நிறுத்துவதற்காக வன்முறையில் ஈடுபடுவதாகவுமே அவரது நிகழ்கால விபரிப்பு இருந்தது.

“நவீன நாஸிகளால் கைப்பற்றப்பட்ட எங்கள் நாட்டின் சரித்திரகாலப் பிராந்தியங்களை ஒரு வருடத்துக்கு முன்னர் நாம் விடுவித்தோம். டொம்பாஸ் பகுதியில் வாழும் மக்கள் 2014 ம் ஆண்டு முதலே தங்கள் மொழியைக் காப்பாற்றுவது முதல் சகல உரிமைகளுக்காகவும் போராடி வருகிறார்கள்.அவர்கள் ரஷ்யாவிடம் தொடர்ந்தும் உதவி கேட்டு வந்தனர். அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக படிப்படியாக நாம் உதவி வருகிறோம்,” என்று குறிப்பிட்டார் புத்தின்.

மேற்கு நாடுகள் ரஷ்யாவின் முதுகுப் பின்னால் திட்டமிட்டு உக்ரேனுக்கு அன்று முதலே ஆயுதங்களைக் கொடுத்து போருக்கு முறுக்கிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார் புத்தின். வாழ்க்கை நெறிகளைப் பொறுத்தவரை மேற்கு நாடுகள் படுமோசமாகிவிட்டன, குடும்பம் என்ற அமைப்பை அழித்தொழிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள்  என்றும், ரஷ்ய ஓர்த்தடொக்ஸ் கிறிஸ்துவத்தை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டிய அவர் ஆங்கிலிக்கன் திருச்சபை ஆணோ, பெண்ணோ அல்லாத கடவுளை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு  மேற்கு நாடுகளால் கொடுக்கப்பட்டுவரும் உரிமைகள் ஒழுக்கங்களைச் சீர்குலைத்து எதிர்காலத்துக் குழந்தைகளுக்கு மோசமான வாழ்க்கைவழியைக் காட்டி வருகிறது என்று சாடிய புத்தின்  தனது நோக்கம் குழந்தைகளைக் காப்பாற்றுவதே என்றார்.

ரஷ்யப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அது வெற்றிகரமாகவே இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட புத்தின் மேற்கு நாடுகள் போட்டிருக்கும் முடக்கங்கள் ரஷ்யாவை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றார். அம்முடக்கங்கள் உலகின் வறிய நாடுகளின் மக்களுக்குப் பெரும் கஷ்டங்களைக் கொடுத்துவருவதாகவும் குறிப்பிட்டார். 

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *