வெனிசுவேலாவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே மூடப்பட்டிருந்த எல்லை மீண்டும் திறந்துவைக்கப்பட்டது.
தென்னமெரிக்காவின் முக்கிய வர்த்தகத் தொடர்புகள் கொண்ட நாடுகளாக இருந்த கொலம்பியாவும், வெனிசுவேலாவும் தமக்கிடையே கொண்டிருந்த அரசியல் முரண்பாடுகளால் தம்மிடையே இருந்த சுமார் 2,000 கி.மீ எல்லையை மூடியிருந்தன. சமீபத்தில் கொலம்பியாத் தேர்தலில் வெற்றிபெற்ற இடதுசாரி அரசின் தலையீட்டால் வெனிசுவேலாவுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் ஒரு வெற்றியாக அவ்வெல்லை பெரும் கொண்டாட்டங்களுடன் ஞாயிறன்று திறந்துவைக்கப்பட்டது.
கொலம்பியாவின் லா பராடா நகருக்கும், வெனிசுவேலாவின் சான் அந்தோனியே டெல் தச்சீரா நகருக்குமிடையே அமைந்திருக்கிறது அந்த எல்லைக்காவல். சுமார் 90,000 வெனிசுவேலானர் பெரும் சந்தோசத்துடன் கொலம்பியாவுக்குள் நுழைந்து அந்த மக்களைக் கண்ணிருடன் கட்டித் தழுவிக் கொண்டனர். பல அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் வெனிசுவேலா மக்களுக்கு இனிமேல் அவை கிடைக்கும் என்று பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் குறிப்பிடுகிறார்கள் கொலம்பியர்கள்.
எரிநெய் விலைகள் படுவேகமாக வீழ்ச்சியடைய ஆரம்பித்த 2014 இன் பின்னர் வெனிசுவேலாவின் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைய ஆரம்பித்துத் தொடர்கிறது. வெனிசுவேலாவின் சர்வாதிகாரத் தலைவர் நிக்கொலாஸ் மடுரோ அமெரிக்காவுடன் மோதிக்கொண்டு, கொலம்பியாவில் இதுவரை இருந்த வலதுசாரி அரசுடனும் பகைமை பாராட்டி வந்திருந்தார். அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையும் நீண்ட காலமாகப் வெனிசுவேலாவை வாட்டி வருகிறது.
குறிப்பிட்ட எல்லைகள் மூடப்படும் முன்னர் நாளாந்தம் சுமார் 100,000 பேர் அவற்றினூடாகப் பயணித்து வந்தனர். கொலம்பியாவிலிருந்து எல்லையூடாக போதை மருந்துகள் கடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி அதை மூடிவிட்டார் மடூரோ. அதன் பின்னர் அப்பகுதியில் செயற்படும் மனித உரிமைக்குழுக்களின் தலையீட்டுடன் உயர்கல்வி மாணவர்கள், அவசிய மருத்துவ உதவி வேண்டியவர்கள் மட்டும் கொலம்பியாவுக்குச் சென்றுவர அனுமதிக்கப்பட்டனர்.
சாள்ஸ் ஜெ. போமன்