தந்தை வழியில் மகன். இவ்வருடத்தின் முதலாவது நோபல் பரிசு ஸ்வாந்தெ பாபூவுக்கு அறிவிக்கப்பட்டது.
ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கும்போது சர்வதேச அறிவியலாளர்களின் கவனம் சுவீடன் நாட்டின் மீது விழுவது வழக்கம். அறிவியலுக்காகத் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்ட அல்பிரட் நோபல் இறக்கும்போது தனது சொத்துக்களை, வருடாவருடம் குறிப்பிட்ட துறைகளில் மனித குலத்துக்குப் பெரும் சேவை செய்பவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று உயில் எழுவைத்தார். அதன்படி 1901 ம் ஆண்டு முதல் முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தின் திங்கள் கிழமையான 03 ம் திகதியன்று இவ்வருடத்தின் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசைப் பெறுபவரின் பெயர் ஸ்டொக்ஹோம் நகரில் அறிவிக்கப்பட்டது. வழக்கம்போல அது யாருக்கு, எதற்காகக் கொடுக்கப்படலாம் என்று ஊடகங்கள் ஓரிரு வாரங்களாகவே தத்தம் யூகங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தன. பல வருடங்களாக அப்படியான யூகங்களில் பெயர் அடிபட்ட ஸ்வாந்தெ எரிக் பாபூ [Svante Erik Pääbo] என்ற சுவீடிஷ் உயிரியல் விஞ்ஞானிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
1955 இல் ஸ்டொக்ஹோம் நகரில் பிறந்த பாபூ சுவீடனின் உப்சாலா பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைப் பெற்றுக்கொண்டவர். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆராய்வுகளில் ஈடுபட்டுவரும் பாபூ லீப்ஸிக் பல்கலைக்கழகத்தில் பரிணாம மானுடவியல் பிரிவில் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
மனித இனத்தின் வெவ்வேறு மூதாதையர்கள் எந்தெந்தக் காலத்தில் எந்தப் பிராந்தியங்களில் வாழ்ந்தார்கள். வெவ்வேறு மூதாதையர்கள் எந்தெந்த மரபணுக்களைக் கொண்டிருந்தார்கள், அவர்களிடையேயான கலப்பு எப்படியிருந்தது. வித்தியாசமான இன வழிகளின் கலப்பினால் ஏற்பட்ட மரபணுக்களின் சேர்க்கை இன்றைய மனிதர்களின் வாழ்வில் எப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது போன்றவை பாபூவின் ஆராய்ச்சிகளில் அடங்கும். அவ்வழியில் மரபணுக்கலப்புக்களை ஆராய அவர் கண்டுபிடித்த வழிமுறைகள் சர்வதேச மருத்துவத்தின் அடிப்படை ஆராய்வுகளுக்குப் பல கதவுகளைத் திறந்திருப்பதே பாபூவுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுக்கான காரணமாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
ஸ்வாந்தெ பாபூ மட்டுமல்ல அவரது தந்தையான சூனெ பெரிஸ்த்ரொம் கூட நோபலின் பரிசை அதே துறையில் 40 வருடங்களுக்கு முன்னர் பெற்றவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரியல் வேதியலாளரான பெரிஸ்த்ரொம் உப்சாலா, லுண்ட் ஆகிய சுவீடனின் பல்கலைக்கழகங்களில் சேவைசெய்தவராகும். இன்னொரு சுவீடிஷ்காரரான பெங்க்த் சாமுவெல்சன், பிரிட்டிஷ்காரரான John R. Vane ஆகிய இருவருடன் சேர்ந்து பெரிஸ்த்ரொம் தனது பரிசைப் பெற்றிருந்தார்.
சாள்ஸ் ஜெ.போமன்