யாழ்ப்பாணத் தமிழ் பேசி இரசிகர்கள் இதயம் நிறைந்த தனித்துவமான கலைஞர்
‘அப்புக்குட்டி ‘ ரி.ராஜகோபால்

“வணக்கம் பிள்ளையள். நான் ஆவரங்கால் ஆறுமுகத்தின்ர பேரன் அப்புக்குட்டி ராஜகோபால். என்ன? யாரெண்டு கேக்கிறியளோ? இப்ப இருக்கிற இளசுகளுக்கு என்னத் தெரிய நியாயமில்ல. ஆனால், என்னோட கதைச்சுப்பாத்தியள் எண்டால் அப்புக்குட்டி அண்ண, அப்புக்குட்டி அங்கிள் எண்டு எனக்குப் பின்னால வந்திடுவியள்.
பிள்ளையள் நான் முந்தி போயிலைக்கடை வைஞ்சிருந்தனான், அதை சுத்திக்கொண்டு போயிற்றாங்கள்.
பிறகு புடவக்கடை நடத்தினனான், அழகான பொம்பிளப்பிள்ளையள் கடையில வேலை செய்தவ. அதுகள் ஒவ்வொண்டாப் போட்டுதுகள், அதுகள் சும்மா போகேல்ல, வந்த பொடிப்பயலுகள் பிடிச்சுக்கொண்டு போட்டாங்கள், அதோட புடவைக்கடையைப் பூட்டிப்போட்டன்.
பிறகு துடங்கின தொழில் இப்ப வரைக்கும் சிக்கலில்லாமல் போகுது.
இப்ப இஞ்ச பிரான்ஸ் பரிஸ் நகரத்தில பெடி பெட்டையள் எல்லாம் அப்புக்குட்டி அங்கிள் எண்டு வலு வாரப்பாடு.
என்ன தொழில் தெரியுமோ?
பொம்பிள மாப்பிளையப் பொருத்தி விடுற கலியாணப் புரோக்கர் வேலை.
உலகத்தில எங்க இருந்தாலும் வட்சப், வைபர், பேஸ்புக் மசென்சர் எண்டு எல்லா வழியிலயும் என்னோட தொடர்பு கொள்ளலாம்.”
இதனைக் குரல் வழியாகப் பல நூறு மேடைகளில் கேட்டவர்களும், இலங்கை வானொலியில் இவர் நடித்த நாடகங்களைக் கேட்டு ரசித்தவர்களும் இந்தப் பகுதியை வாசித்த பொழுதே அந்த நாள் நினைவுகளை மீட்டி சிரித்து மகிழ்ந்திருப்பீர்கள்.
யாழ்ப்பாணப் பேச்சுவழக்கை வானொலிக் கலையாக்கியவர்களில் ‘அப்புக்குட்டி’ ரி.ராஜகோபால் அவர்கள் தனியிடம் வகிக்கின்றார்.
வானொலியில் இவரது குரலைக் கேட்டு ரசித்த வானொலி ரசிகர்கள் எவருமே ‘அப்புக்குட்டி’ ரி.ராஜகோபால் என்கின்ற வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞரை மறந்திருக்க மாட்டார்கள்.
எல்லோரும்
கலைஞர்களாகிவிடுவதில்லை.
உலகில் கலைஞர்கள் கலைஞர்களாகவே பிறக்கின்றார்கள்.
அவ்வகையான ஒரு கலைஞர்தான்
‘அப்புக்குட்டி’ ரி.ராஜகோபால் அவர்கள்.
இவர் எந்த மேடையையும், எவ்வகையான ரசிகர்களையும் சமாளிக்கும் வல்லமை பெற்றவர்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்து வளர்ந்த ரி.ராஜகோபால் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்றார்.
ஒன்பது வயதில் கல்லூரியின் கலைவிழாவில் மேடையேறினார்.
இலங்கைக்கலையுலகிற்குக் கலைப்பெருமகன் ஏ.ரகுநாதன், கே.எம்.வாசகர், அப்பையா நற்குணசேகர், குணபதி கந்தசாமி போன்ற பல கலைஞர்களை வழங்கிய பெருமைக்குரிய மானிப்பாய் இந்துக்கல்லூரி ரி.ராஜகோபால் என்ற கலைஞனையும் ஈழத்துக் கலையுலகிற்கு வழங்கிப் பெருமை சேர்த்தது.
1959ம் ஆண்டு கலைப்பெருமகன்
ஏ. ரகுநாதன் அவர்களால் கலையரசு க.சொர்ணலிங்கம் அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, அப்பொழுது அவர் தயாரித்த ‘தேரோட்டி மகன்’ நாடகத்தில் நடித்தார்.
மானிப்பாய் மறுமலர்ச்சி நாடக மன்றத்தின் நாடகங்களிலும்
அக்காலத்தில் நடித்து வந்தார்.
இந்தக் காலகட்டத்தில் இவர் ரி.ராஜகோபால் ஆகவே வலம் வந்தார்.
1963ம் ஆண்டு பணியின் நிமித்தம் கொழும்பு மாநகர் சென்று அங்கு colonial motors ltdல் தொழில் வாய்ப்புப் பெற்றார்.
1967ல் இவர் இலங்கை வானொலி நிலையத்துக்குள் கலைஞராகக் காலடி எடுத்து வைத்தார்.
1925 ஆம் ஆண்டிலேயே இலங்கை வானொலியில் தமிழ் நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டதாக கலையரசு க.சொர்ணலிங்கம் அவர்கள் எழுதியுள்ள நாடக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வானொலியில் நாடகங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்ப ஆரம்பித்தது 1940ஆம் ஆண்டிற்குப் பின்னர் என்பதும் பதிவாகியுள்ளது.
இலங்கை வானொலியின் நாடகத் தந்தை சானா சண்முகநாதன் அவர்கள் 1950களில் இலங்கை வானொலி நாடக தயாரிப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய பின்னர் வானொலி நாடகத்துறை வளர்ச்சிபெற்றது.
இலங்கை வானொலி தமிழ்ச்சேவை ஒன்று என தேசிய சேவையாகவும், தமிழ்ச்சேவை இரண்டு என வர்த்தக சேவையாகவும் இயங்கிவந்த காலத்தில் சனிக்கிழமைதோறும் இரவு ஒன்பதரை மணிக்கு ஒலிபரப்பாகும் அரைமணித்தியால நாடகங்கள், ஒரு மணித்தியால நாடகங்கள் மிகவும் புகழ் பெற்று விளங்கின.
சானா அவர்களின் காலத்தை அடுத்து, கே.எம்.வாசகர், ஜோர்ஜ் சந்திரசேகரன், பி.விக்னேஸ்வரன், பி.எச்.அப்துல் ஹமீத் ஆகியோர் நாடகத் தயாரிப்பாளர்களாகத் திகழ்ந்தார்கள்.
தேசிய சேவை நாடகங்களில் தூயதமிழிலும் இந்தியப் பேச்சுவழக்குத் தமிழிலும் நாடகங்கள் அமைந்திருந்த காலம் மாற்றப்பட்டது.
காலப்போக்கில் யாழ்ப்பாணத்தமிழில் நாடகத் தயாரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை வானொலி தேசிய சேவையில் நடைபெற்றது போலவே வர்த்தகசேவையிலும் நாடகங்கள் ஒலிபரப்பாகத் தொடங்கின.
வர்த்தக நிறுவனங்கள் சார்பாக ஒலிபரப்பாகிய நாடகங்களில்
சில்லையூர் செல்வராஜனின் “தணியாத தாகம்”, வரணியூரானின் “இரைதேடும் பறவைகள்”. ராம்தாஸின் “கோமாளிகள் கும்மாளம்”, கே. எஸ். பாலச்சந்திரனின் “கிராமத்துக் கனவுகள்” போன்றவை புகழ் பெற்றன.
இது போன்று தேசிய சேவையில் ‘முகந்தார்’ எஸ்.ஜேசுரட்ணம் அவர்களின் ‘முகத்தார் வீடு’ புகழ் பெற்றது.

இலங்கை வானொலிக்கலைஞராகிய ரி.ராஜகோபால் ‘புரோக்கர் கந்தையா’
‘மஞ்சள் குங்குமம்’ ‘நீ இல்லையேல்’
‘மனித தர்மம்’ ‘சுமதி’ ‘கறுப்பும் சிவப்பும்’ ‘றூப்புத்தொரா மஸ்த்தானா’
‘காதல் ஜாக்கிரதை’ ‘கலாட்டா காதல்’
‘கலையும் கண்னீரும்’
‘சத்தியவான் சாவித்திரி’
‘காற்றோடு கலந்தது’ ‘ஆலமரத்தடி வீடு’ ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
கலைஞர் ரி.ராஜகோபால் அவர்கள் பாடும் திறமையுடையவர்.
நடிகமணி வி வி வைரமுத்துவின்
‘அரிச்சந்திர மயாணகாண்டம்’ நாடகத்தில் அயலாத்துப் பிள்ளையாகவும் நடித்திருக்கிறார்.
colonial motors ltdல் ஒன்றாகப் பணியாற்றிய கலைஞர் எஸ்.ராம்தாஸ் அவர்கள் ரி.ராஜகோபால் அவர்களின் கலைவாழ்வில் மறக்க முடியாத ஒருவர்.
ரி.ராஜகோபால் அவர்களின் கலைத்துறை உயர்வுக்கு எஸ்.ராம்தாஸ் அவர்களின் பங்களிப்பு மிக உன்னதமானது.
இப்பொழுதும் ராம்தாஸ் என்று கூறும் வேளையில் ராஜகோபால் அவர்கள் கண் கலங்குவார்.
மரிக்கார், உப்பாலி ஆகியோருடன் அப்புக்குட்டியாக வானொலியில் வலம் வந்து மக்கள் மனம் கவர்ந்த கலைஞர் ரி.ராஜகோபால்
அன்பான உறவுகளே!
போன கிழமை வீரகேசரியை வாசிச்ச நீங்கள் போணில வந்து தந்த உற்சாகத்துக்கும், முகநூலிலை பதிவுகளிட்டதுக்கும் மிகவும் நன்றி.
-உங்கள் அன்பு அப்புக்குட்டி.
இந்தக் கிழமை ஒரு பழைய கதை:
“யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில வந்து கரடி சுட்ட ‘அப்புக்குட்டி’ எண்டு கேட்டாலும் அந்தக் காலத்தில என்ர வீட்டு முத்தத்தில கொண்டுவந்து விடுவினம். ஓம், கரடி வேட்டைக்காரன்.
உங்க கனபேருக்கு கரடி விட்டுத்தான் பழக்கம். ஆனால், அப்புக்குட்டியன் அப்பிடியில்ல. என்னக்கண்டால் உங்களுக்குத் தெரியும் கரடி வேட்டையில எவ்வளவு கெட்டிக்காரன் எண்டு. கும்மிருட்டுக்க ஒரு மைலுக்கு அங்கால இருந்து கரடி வாரதை இந்த அப்புக்குட்டியன் கண்டு பிடிச்சுச் சொல்லிப்போடுவான். ஒருத்தரும் கரடி வேட்டைக்குப்போறதில்ல இந்த அப்புக்குட்டியன் மட்டும் தான் கரடி வேட்டைக்குப் போறனான்.
நான் இதச் சும்மா சொல்லேல்ல எங்கயாவது மேடையள் சந்திச்சால் இன்னும் விபரமாச் சொல்லுறன் வாருங்கோ”
கலைநிகழ்ச்சி மேடைகளில் கலகலப்பூட்டும் குரல். காத்திருக்கும் கலாரசிகர்களுக்குக் களிப்பூட்டும் குரல். யாழ்ப்பாணத்து பேச்சுவழக்குச் சொற்களை மிக லாவகமாகப் பேசி கலா ரசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் குரல். செல்லமணியுடன் செல்லம் கொண்டாடும் குரல்.
மரிக்கார், உப்பாலி ஆகியோருடன் மல்லுக்கட்டும் குரல். ஆம், ‘அப்புக்குட்டி’ ரி.ராஜகோபால் அவர்களின் குரல் அப்படியான குரல்.
இப்பொழுதும் அவர் பேசினால், பாடினால் செவிக்கு இனிமையாகவே இருக்கும்.
வீரகேசரி கடந்த வார கலையரங்கம் பகுதி முகநூலில் பதிவாகியது.
அதில் ‘அப்புக்குட்டி’ ரி.ராஜகோபால் அவர்களின் நண்பர், கலைஞர் கே.சந்திரசேகரன் எழுதியது:
“யாழ் தேவியில் எங்களது அன்றைய பயணங்களின்போது ரயிலில் பயணம் செய்த அத்தனை பயணிகளையும் எங்கள் கம்பாட்மென்டுக்கு வரவழைக்கும் வசீகரக் குரலுக்குச் சொந்தக்காரன்தான் எங்கள் நண்பன் ராஜகோபால்.
இன்றும் அதே குரல், அப்படியே..
வாழ்க நலமுடன் கோபால்”.
‘அப்புக்குட்டி’ ரி.ராஜகோபாலின் மற்றொரு நண்பர், கலைஞர் மஹ்தி ஹசன் இப்ராஹிம்:
“இலங்கை வானொலியில் சுறுசுறுப்பாக இயங்கிய காலத்தில் அப்புக்குட்டி ராஜகோபால் உள்ளிட்ட கோமாளிகளுடன் கழித்த காலங்கள் மறக்க முடியாதவை!
பின்னாட்களில் மரிக்கார் ராம்தாஸ்
வாய்ப்புகள் வழங்க நான் எழுதிய ஏராளமான நாடகங்களில் அவர்கள் அனைவரும் நடித்ததை மகிழ்ச்சியோடு
நினைவு கூர இது நல்ல தருணம்!”
என முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு ‘அப்புக்குட்டி’ ரி.ராஜகோபால் அவர்களின் நண்பர்கள், அபிமானிகள் எனப் பலரும் பதிவிட்டுள்ளனர்.
ஆறு தசாப்தங்களுக்கு மேலாகக் கலைப்பயணம் புரியும் ‘அப்புக்குட்டி’ ரி.ராஜகோபால் அவர்களை முதலில் புகழ்பெற வைத்த நாடகம்
கே.எம்.வாசகரின் ‘புரோக்கர் கந்தையா’ ‘பார்வதி பரமசிவம்’ எஸ்.ராம்தாஸின் ‘காதல் ஜாக்கிரதை’ ‘கலாட்டா காதல்’ எஸ்.எஸ்.கணேசபிள்ளையின் ‘கறுப்பும் சிவப்பும்’ ஆகிய மேடை நாடகங்கள்.
‘புரோக்கர் கந்தையா’ இலங்கையின் பல பகுதிகளிலும் மேடையேற்றப் பட்டது. ‘புரோக்கர் கந்தையா’ நாடகத்தின் வெற்றிக்கு ரி.ராஜகோபால் அவர்களின் குரலும் நடிப்பும் உறுதுணை புரிந்தன.
இந்த நாடகத்துக்குப் பின்னர் ‘அப்புக்குட்டி’ என்ற கதாபாத்திரத்தை இலங்கை வானொலியில் தூக்கி நிறுத்திய நாடகம் எஸ்.ராம்தாஸ் எழுதி, அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் தயாரித்தளித்த ‘கோமாளிகள் கும்மாளம்’.
இந்த வானொலித் தொடர் நாடகம் ரி.ராஜகோபால் அவர்களின் கலைவாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
இந்நாடகத்தில் இவரது குரலுக்காகவே ஒரு கதாபாத்திரம் உருவானது.
எஸ்.ராம்தாஸ் ‘மரிக்கார்’ ஆகவும், எஸ்.செல்வசேகரன் ‘உபாலி’ ஆகவும், ரி.ராஜகோபால் ‘அப்புக்குட்டி’ ஆகவும்
‘கோமாளிகள் கும்மாளம்’ வானொலித் தொடர் நாடகத்தில் வலம் வந்தார்கள்.
இந்த மூன்று பாத்திரங்களுக்கும் மேலாக ‘ஐயர்’ பாத்திரத்தில் அப்துல் ஹமீத் வலம் வந்தார்.
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் பேசும்
‘அப்புக்குட்டி’ என்ற கதாபாத்திரம் வானொலி நேயர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
‘அப்புக்குட்டி’ மனைவியாக ‘செல்லமணி’ பாத்திரத்தில் திருமதி சுப்புலக்ஷ்மி காசிநாதன் ஈடுகொடுத்து நடித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த மக்களால் மாத்திரமன்றி கொழுப்பிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் மூலம் ‘அப்புக்குட்டி’ ரி.ராஜகோபால் பெரும் புகழ் பெற்றார்.
எஸ்.ராம்தாஸின் ‘கோமாளிகள் கும்மாளம்’ சில்லையூர் செல்வராஜனின் ‘தணியாத தாகம்’
எஸ்.ராம்தாஸின்’விண்வெளியில் கோமாளிகள்’
எஸ்.எஸ்.கணேசபிள்ளையின் ‘இரை தேடும் பறவைகள்’
எஸ்.ஜேசுரட்ணத்தின் ‘முகத்தார் வீடு’
கே.எஸ்.பாலச்சந்திரனின்
‘கிராமத்துக் கனவுகள்’ ஆகிய தொடர் நாடகங்களில் நடித்து முத்திரை பதித்தவர் ‘அப்புக்குட்டி’ ரி.ராஜகோபால். குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்தத் தொடர் நாடகங்களுடன்
500 க்கும் மேலான வேறு நாடகங்களில் வானொலி மேடை எனப் பங்களிப்புச் செய்துள்ளார்.
‘கோமாளிகள் கும்மாளம்’ தொடர் நாடகம் வானொலியில் ஒலிபரப்பாகிவந்த வேளையில் அதனைத் தொடர்ச்சியாகக் கேட்டுவந்த புகழ்பெற்ற வர்த்தகர் எம். முகம்மது அதனைத் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தார். எஸ்.ராம்தாஸ் கதை எழுத எஸ். ராமநாதன் இயக்க ‘கோமாளிகள்’ திரைப்படம் 1976ல் உருவானது.
எஸ்.ராம்தாஸ், ரி.ராஜகோபால், எஸ்.செல்வசேகரன், பி.எச்.அப்துல் ஹமீத், சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன்,
கே. சந்திரசேகரன், சுப்புலக்ஷ்மி காசிநாதன், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரட்னம்), எஸ்.ஜேசுரட்ணம், கே.ஏ.ஜவாஹர் எனப் பலர் நடித்தனர்.
கண்ணன் – நேசம்இரட்டையர்கள் இசையமைத்தனர்.
இதனை அடுத்து ‘ஏமாளிகள்’
‘நெஞ்சுக்கு நீதி’
‘புதிய காற்று’ ‘நான் உங்கள் தோழன்’
‘மலையோரம் வீசும் காற்று’ ஆகிய திரைப்படங்களில் ரி.ராஜகோபால் நடித்திருந்தார்.
அத்துடன் சகோதரமொழிப்படங்கள் பலவற்றுக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் யாழ்ப்பாணத் தமிழ் பேசி இரசிகர்கள் இதயம் நிறைந்த தனித்துவமான கலைஞராக
‘அப்புக்குட்டி ‘ ரி.ராஜகோபால் திகழ்கிறார் என்றால் என்றும் மிகையாகாது.
நன்றி : வீரகேசரி