2022 விஞ்ஞானத்துறைகளுக்கான மூன்றாவது பரிசான வேதியியல் பரிசு பெற்றவர்களில் பெண் விஞ்ஞானியும் ஒருவர்.
நோபல் பரிசுகள் கொடுக்கப்பட ஆரம்பித்த காலம் முதல் இதுவரை அப்பரிசுகளைப் பெற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்ற விமர்சனம் சமீப காலத்தில் பெருமளவில் எழுந்திருக்கிறது. அதிலும் விஞ்ஞானத்துறைகளில் பரிசு பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவானது. இவ்வருடம் இதுவரை கொடுக்கப்பட்ட விஞ்ஞானத்துறைக்கான பரிசுகளில் ஒக்டோபர் 05 ம் திகதி அறிவிக்கப்பட்ட இரசாயனத்துக்கான பரிசுகளைப் பகிர்ந்துகொள்ளும் மூவரில் ஒருவர் கரோலின் ஆர்.பெர்த்தோசி என்ற அமெரிக்கராகும். இரசாயனத்துறையில் நோபலின் பரிசைப் பெறும் எட்டாவது பெண் இவராகும்.
“ஒரு எளிமையான முறையைத் தேர்ந்தெடுத்தாலும் பயனளிக்கக்கூடிய, மேம்பட்ட மூலக்கூறுகளை உருவாக்கலாம்,” என்பதையே பரிசுகளைப் பெற்ற விஞ்ஞானிகள் காட்டியிருப்பதாகப் பரிசுக்கான காரணமாக நோபல் பரிசுக்குழு விபரித்திருக்கிறது. செயற்கையான முறையில் இயற்கையில் இருக்கும் மூலக்கூறுகளை உருவாக்குவதன் மூலம் மருத்துவ உலகத்துக்குப் பெரும் பயனளிக்கும் சேவையை அவர்களுடைய கண்டுபிடிப்புக்கள் கொடுத்திருக்கின்றன.
கரோலின் ஆர்.பெர்த்தோசியுடன் சேர்ந்து பரிசைப் பெறுபவர்களில் இன்னொருவர் டென்மார்க்கைச் சேர்ந்த மோர்ட்டன் மேல்டால். மேல்டால் கொப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இன்னொருவர் அமெரிக்காவைச் சேர்ந்த கே.பரி ஷார்ப்லெஸ் ஆகும். ஷார்ப்லெஸ் ஏற்கனவே வேதியலுக்கான நோபல் பரிசை 2001 இல் பெற்றிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்