நான்கு வாரங்களில் உதைபந்தாட்டத்துக்கான சர்வதேசக் கோப்பை மோதலில் கத்தார் சந்திக்கவிருக்கிறது ஈகுவடோரை.

எவரும் எதிர்பார்க்காத விதமாக சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களின் களங்களை ஒழுங்கு செய்யும் பாக்கியம் கத்தாருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து சர்ச்சைகளுடன் காலம் வேகமாகக் கடந்துவிட்டது. இன்னும் நான்கே வாரங்களில் அல் கோர் நகரிலிருக்கும் அல் பைத் அரங்கில் ஆரம்பமாகவிருக்கிறது முதலாவது மோதல். கத்தாரின் வெவ்வேறு பாகங்களிலில் புத்தம் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் எட்டு அரங்குகளில் டிசம்பர் 18 ம் திகதிவரை உலக நாடுகளின் தேசியக் குழுக்கள் மோதவிருக்கின்றன. கோப்பைக்கான கடைசி மோதல் கத்தாரின் தேசிய தினமான டிசம்பர் 18 ம் திகதியன்று கோலாகலமாக நடைபெறும். 

சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்கள் ஆரம்பித்து இதுவரை 92 வருடங்களாகியிருக்கின்றன. வழக்கமாக மே – ஜூலை மாத இடைவெளிக்குள் நடைபெறும் மோதல்கள் முதல் தடவையாக நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடப்பது இதுவே முதல் தடவையாகும். கோடை காலத்தில் கத்தார் அனுபவிக்கும் கடுமையான வெப்பநிலையைக் கவனத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டது. பெரும்பாலான ஐரோப்பிய நாட்டு உதைபந்தாட்டக் குழுக்களின் எதிர்ப்பை ஒதுக்கிவிட்டு அந்த முடிவு எடுக்கப்பட்டது.

நடக்கவிருக்கும் மோதல்களைக் கண்டு களிக்கச் சுமார் 1,2 மில்லியன் உதைபந்தாட்ட விசிறிகள் கத்தாருக்கு யாத்திரிகை செய்வார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை விற்கப்பட்டிருக்கும் சுமார் 2,89 மில்லியன் நுழைவுச்சீட்டுகளில் கத்தார், அமெரிக்கா, ஜேர்மனி, சவூதி அரேபியா, மெக்சிகோ, எமிரேட்ஸ், ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளில் பெருமளவு விற்கப்பட்டிருக்கின்றன.  32 நாடுகளின் தேசிய உதைபந்தாட்டக் குழுக்கள் மோதல்களில் பங்கெடுக்கும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *