பொன்னியின் செல்வனும் Funny Boyயும்! | எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்

தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை படத்துக்கான விளம்பர வேலைகள் தொடங்கியபோதே பல எதிர்மறையான எதிர்வுகூறல்களை முன்வைத்தார்கள், பின்னர் படம் வெளிவந்துள்ள நிலையில் பலரும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் தொடர்பான முடிவிலிச் சர்ச்சைகளைப் பார்க்கும்போது 2020 நவம்பர் மாதம் வெளிவந்த Funny Boy தொடர்பில் எழுந்து தணிந்த சர்ச்சைகள் ஞாபகத்துக்கு வந்து போயின. இதனை வாசிக்கும் உங்களில் பலருக்கும் Funny Boy தொடர்பான அந்த சர்ச்சைகள் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.  

இரண்டு படங்களுமே இரண்டு வேறுபட்ட காலப் பகுதியில் (பொன்னியின் செல்வன் -1954, Funny Boy -1994) எழுதப்பட்ட நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள். பொன்னியின் செல்வன் இந்தியாவில் பேசப்படும் ஆறு மொழிகளிலும் எடுக்கப்பட்ட ஒரு படம். அதிலும் சில வசனங்கள் சிங்களத்தில் வருகின்றன. Funny Boy சிங்களம், தமிழை ஆங்காங்கு தூவி ஆங்கிலத்தை பிரதான மொழியாகக் சர்வதேச மொழிப்படம் என்ற பெயரில் தீபா மேத்தா விற்க முயன்ற ஒரு சரக்கு ஆகும்.  

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல்,  சரித்திரத்தில் நடந்த சில விடயங்களை மட்டும் உருவியெடுத்து, ஆகக் குறைந்தது நான்கு முக்கியமான பாத்திரங்களாக கற்பனைப் பாத்திரங்களைப் புகுத்திக்  கதையை நகர்த்தும் உத்தியுடன் எழுதப்பட்ட நாவல். அதுமட்டுமன்றி, கதை முழுவதும் உலாவரும் வந்தியத் தேவனும் உண்மையில் பின்னர் குந்தவையின் கணவரானவர் என்பதைத் தவிர்த்து அவரின் பயணம், சாகசம் எல்லாமே கற்பனையான விடயமாகும்.  

அதேநேரம் ஒரு ஜனரஞ்சக நாவலாக எழுதப்பட்ட “Funny Boy” என்ற நாவலோ இலங்கையில் அன்று நடைபெற்ற தமிழர் மீதான இனப்படுகொலை, இலங்கையில் ஓர்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் தனது பால்ய பருவம் முதல் முகம் கொடுக்கும் உண்மையான சவால்களைக் கோர்த்து எழுதப்பட்ட ஒரு நாவல். இந்தக் கதையில் தலைநகரில் எண்பதுகளில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கைமுறை சிங்களவருடன் ஏற்பட்ட


முரண்பாடுகள், நெருக்கடி நிலை என்பவற்றை இணைத்து எழுதப்பட்ட, யதார்த்தத்துக்கு மிக அருகாகப் பயணித்த ஒரு நாவல் என்று கூறலாம். இந்த நாவலில் மிகச் சில விடயங்களே கற்பனையாகச் சேர்க்கப்பட்டிருந்தன.  

இவை ஒருபுறம் இருக்க, இரண்டு கதைகளும் படமாக எடுக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்ட நேரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. அவற்றுள் பல பொதுவானவையாக இருந்தன.

  • 1. நடிகர் தெரிவு  

பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை பல நடிகர்களின் பொருத்தப்பாடு தொடர்பாக சிறுசிறு சர்ச்சைகள் எழுப்பட்டாலும் குந்தவை, நந்தினி ஆகிய பாத்திரங்களில் நடித்தவர்களின் தோல் நிறம் தமிழரின் நிறத்தை ஒத்ததாக இல்லை என்ற குற்றச்சாட்டு கொஞ்சம் பெரிதாகவே பேசப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு தற்போது படம் வெளிவந்த பின்னரும் தொடர்கிறது.

இதேபோல “Funny Boy” படத்திலும் இலங்கைத் தமிழரின் கதைபேசும் இந்தப் படத்தில் ஒரு தமிழரைக் கூட நடிக்க வைக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. அதிலும் தமிழ் இளைஞராக நடித்தவரின் நிறம் கதையை எழுதியவரான சியாம் செல்வதுரையின் நிறம் போல இல்லை என்ற குற்றச்சாட்டு பெரிதாகப் பேசப்பட்டது.  

  • 2. வரலாற்றுத் திரிபு

Funny Boy படத்தைப் பொறுத்தவரை அதில் முக்கிய திரிபாக 1983 இல் நாடுமுழுவதும் நடைபெற்ற இனப்படுகொலைத் தாக்குதல் விடுதலைப் போராளிகள் ஒரு சிங்களக் கிராமத்தைத் தாக்கியதன் காரணமாகவே நடைபெற்றது என்று காட்டியமையைக் குறிப்பிடலாம். அந்த இனவெறித் தாக்குதல் உண்மையில் பலமாதங்கள் திட்டமிடப்பட்டு, சரியான சர்ந்தர்ப்பதுக்குக் காத்திருந்து செய்யப்பட்டது இன்று ஈழப் பிரச்சினையை நன்கு அறிந்துள்ள அனைவரும் அறிந்ததே. இவ்வாறு உண்மைக்கு மாறான விடயத்தைக் காட்டியதற்கு தமிழர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பும் வெளியானது.  

பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை கல்கி பல விடயங்களை கதைக்குச் சுவை சேர்க்க பல கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கியதோடு நாவலில் வரும் பல விடயங்கள் கற்பனையானவையே. ஆனால் தமிழ்


மொழி, இன அபிமானிகளைப் பொறுத்தவரை மணிரத்னம் கரிகாலனைக் கொன்றது பார்ப்பனர் என்று காட்டாதது தவறு என்றும், பாண்டியர்கள் கரிகாலனைக் கொன்றதாகக் காட்டியது தவறு என்றும் படம் வெளிவந்த பின்னர் மல்லுக்கு நிற்கிறார்கள்.    

  • 3. படத் தயாரிப்புக்கும் இலங்கை அரசுக்குமான தொடர்பு  

Funny Boy படத்தை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் முன்வைத்த இன்னொரு முக்கிய குற்றச்சாட்டு, அந்தப் படம் இலங்கை அரசின் அனுசரணையுடன் எடுக்கப்பட்டது என்பதாகும். குறிப்பாக தமிழரை இனப்படுகொலை செய்த சிங்கள் அரசின் உதவியுடன் தீபா மேத்தா இந்தப் படத்தை இலங்கையில் எடுத்திருக்கிறார். எனவே தமிழர்கள் இந்தப் படத்தை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்பது அப்போது எதிர்ப்புக் காட்டியவர்களின் வாதமாக இருந்தது.  இந்தப் படம் இலங்கையிலேயே எடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அதேநேரம், அப்போதைய இலங்கை அரசு படப்படிப்பை பிரச்சனையின்றி எடுத்து முடிக்கவும் உதவியிருக்கலாம். ஆனால், தீபா மேத்தாவுக்கும் இலங்கை ஆட்சியாளருக்கும் பணக் கொடுக்கல் வாங்கல்கள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழவில்லை.  

அதேநேரம் பொன்னியின் செல்வன் படம் தமிழக இயக்குனரான மணிரத்னத்தினால் இயக்கப்பட்ட படம். இலங்கையில் பல சம்பவங்கள் நடைபெறுவதாக கல்கி கதையில் எழுதியிருந்தாலும், மணிரத்னம் படத்தின் எந்தப் பகுதியையும் இலங்கையில் எடுக்கவில்லை. இலங்கையில் காட்சிகளை எடுத்தால் வேறு விதத்தில் தனக்கும் பெரும் எதிர்ப்பு வரும் என்று நினைத்து அதனைத் தவிர்த்தாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

ஆனால் பொன்னியின் செல்வன் இயக்குனர் “இனப்படுகொலை புரிந்த அரசுடன்” உறவாடாவிட்டாலும் இந்தப் படத்தைத் தயாரித்தவரான Lyca சுபாஸ்கரன் இலங்கை அரசுடன் நட்பு பாராட்டி வந்த ஒருவராகவே பல ஊடகங்கள் பரப்புரை செய்து வந்துள்ளன.  குறிப்பாக மகிந்தவுடன் பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டு இறுதிப் போருக்குப் பின்னரான சூழலில் கடந்த 10 வருடங்களில் மீண்டும் மீண்டும் எழுப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி இங்கிலாந்தில் அவர் அரசுக்கு 60 மில்லியன் பவுண்ஸ் வரி ஏய்ப்புச் செய்ததாக அங்குள்ள பிரபல பத்திரிகைகள் கூட செய்தி வெளியிட்டிருந்தன.  

கடும் எதிர்ப்பும் மென்போக்கும்  

ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் காட்டப்பட்ட எதிர்ப்பில் பாரிய வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. பொன்னியின் செல்வன் படத்திற்கு உண்மையில் படம் வெளிவரும் முன்னர் கடும் எதிர்ப்பை யாரும் காட்டவில்லை. மாறாக, எமது வரலாற்றை உள்ளது உள்ளபடி இயக்குனர் காட்டுவாரா என்ற வகையான விசனங்களே தெரிவிக்கப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால் நோகாமல் அடிப்பது போலவே பொன்னியின் செல்வனுக்கு எதிர்ப்புக் காட்டப்பட்டது.  

அதேநேரம் Funny Boy படத்திற்கு எழுந்த எதிர்ப்பு எவ்வளவு என்பது உங்களில் பலருக்கு நன்றாக நினைவிருக்கும் என்று நம்புகிறேன். Instagram, Twitter, Facebook எனப் பல சமூக ஊடகங்களிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் ஊடகங்களில் படக்குழுவினர் நேரலையில் வந்து விளக்கம் சொல்லி படத்துக்கு ஆதரவு தரும்படி கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருந்தது.  

இப்படிப் பொன்னியின் செல்வனுக்கு எதிர்ப்பு பெரிதாக எழவில்லை என்பது ஒருபுறம் இருக்க, கனடாவில் விநியோகஸ்தர் ஒருவர் செய்த கெடுபிடிகள் காரணமாக வழமையாகத் தமிழ்ப் படங்கள் போடப்படும் தியேட்டர்களில் பொன்னியின் செல்வன் தமிழ்ப் பிரதியை திரையிடப்படாத நிலையில் அதற்காக கவலைப்பட்டவர்கள்தான் அதிகம். அதிலும் LYCA இதில் உடனே தலையிட்டு கனடியத் தமிழரும் எமது வரலாற்றுப் பதிவான பொன்னியின் செல்வனைப் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது..

இவ்வாறான பாரபட்சமான அணுகுமுறைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. தமிழரில் பலரைப் பொறுத்தவரை அந்த நாவலில் சில சரித்திர நிகழ்வுகள் தவிர்த்து, ஏனைய யாவும் கற்பனை என்று கல்கியே வந்து சொன்னாலும் அதை நிராகரித்து இது எமது வரலாறு சொல்லும் படம் என்று சொல்லிக் கொண்டாடும் மனநிலையிலேயே இவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் இனவாத அரசுடன் கை கோர்த்தவரின் படத்தைப் புறக்கணிப்போம் என்று சொல்லக்கூட இவர்களுக்கு வாய் வரவில்லை. மாறாக எப்படியாவது திரையில் பார்த்துவிட வேண்டும் என்று தவிக்கிறார்கள்.

மறுபுறத்தில் தீபா மேத்தா இலங்கையில் இந்தப் படத்தை எடுத்தார், தமிழ் நடிகர்களைப் பயன்படுத்தவில்லை என்பதைத் தவிர்த்து வேறு வகையில்

இலங்கை ஆட்சியாளருடன் எந்த தொடர்பும் அற்ற நிலையில் அந்தப் படத்தை எதிர்ப்பதற்கு அவர்கள் சொன்ன காரணத்துக்கும் மேலாக, ஓர் பாலின ஈர்ப்பு என்ற விடயத்தை எம்மில் பெரும்பான்மையானோர் இன்னமும் அருவருப்பான மனதோடு அணுகுவதும் முக்கிய காரணமாக இருக்க வேண்டும்.  

இவர்களைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வன் எமது வரலாறு, எமது பெருமை. Funny Boy எமது இளைய தலைமுறையின் கண்ணில் படாமல் மறைத்து வைக்கப்பட வேண்டிய அத்தியாயம்.

  • -எழுதுவது ; வீமன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *