எவரையும் விட அதிகமாகச் செலவிடப்பட்ட கத்தார் உலகக்கோப்பைப் பந்தய அனுமதிச்சீட்டுகளும் அதி விலையுயர்ந்தவையே.
தனது நாட்டில் உதைபந்தாட்டத்துக்கான உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துவதைக் கத்தார் மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறது. அந்த நிகழ்வை நேரடியாகவோ, தொலைக்காட்சிகள் மூலமோ காண்பவர்கள் மூக்கில் விரலை வைக்கவேண்டுமென்பதும் கத்தார் அரச குடும்பத்தினரின் ஆசையாகும். அதனால் அவர்கள் செலவிட்ட தொகை உலகில் இதுவரை எவருமே இதுபோன்ற நிகழ்வொன்றுக்காகச் செலவிடாத அளவு அதிக தொகையாகும். அதே சமயம் அந்த உதைபந்தாட்ட மோதல்களைக் காண வருபவர்களுக்கான அனுமதிச் சீட்டுக்களின் விலையும் இதுவரை எவரும் அறவிடாத தொகையே என்று குறிப்பிடப்படுகிறது.
டிசம்பர் 18 ம் திகதி வரை தொடரவிருக்கும் உதைபந்தாட்ட மோதல்களைக் காண வருவதற்காக மூன்று மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றன. கடந்த உலகக் கோப்பை மோதல்களை விட அதிக அளவில் சர்வதேச உதைபந்தாட்ட ஒன்றியத்துக்கு வருமானம் வரவிருக்கிறது. கணிப்புகளின்படி அந்த அமைப்பு சுமார் 5.4 பில்லியன் டொலர்களை ரஷ்யாவில் நடந்த கடந்த சர்வதேசக் கோப்பைப் பந்தயங்களின்போது அள்ளியிருக்கிறது.
2018 உலகக்கோப்பை மோதல்களின்போது நுழைவுச்சீட்டின் விலை சராசரி சுமார் 255 டொலர்களாக விற்கப்பட்டது. கத்தாரில் அது 340 டொலராகும். உலகக்கோப்பைக்கான கடைசி மோதலைக் காண வருபவர்கள் தலைக்கு சுமார் 810 டொலர் கொடுத்தே நுழைவுச்சீட்டைப் பெறலாம். அது கடந்த இறுதிப்போட்டிக்கான நுழைவுச்சீட்டை விட 59 % அதிகமானதாகும். சராசரியாக கத்தார் நுழைவுச்சீட்டின் விலை 2018 ஐ விட 40 % அதிகமானது.
சாள்ஸ் ஜெ. போமன்