ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய அளவில் விற்கப்பட்ட இக்காருஸ் பேருந்துகளிடம் விடைபெறும் விழா.
ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்த, இக்காருஸ் பேருந்துகளின் பாவனைக்கு, நவம்பர் 20 ம் திகதி ஞாயிறன்று மூடுவிழா நடத்தப்பட்டது. நகரின் பொதுப் போக்குவரத்துச் சேவையில் கடந்த 50 வருடங்களாக இருந்துவந்திருக்கின்றன அந்தப் பேருந்துகள். நீண்டகாலம் பாவிக்கக்கூடிய அவை தயாரிப்பு நிறுத்தப்பட்டாலும் “கட கடா … லொட லொடா” சத்தங்களுடன் கருப்புப் புகையைப் பெருமளவில் வெளியேற்றிக்கொண்டு ஓடின. நீல நிறத்தினான அந்த வண்டிகள் புடாபெஸ்ட் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருந்துவந்தன.
ஹங்கேரியில் 1895 இல் நிறுவப்பட்ட, பேருந்து நிறுவனமான Imre Uhry’s Blacksmith Workshop and Coach Factory 1999 இல் Ikarus என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1960 – 1990 காலகட்டத்தில் இக்காருஸ் உலகின் நான்கு பெரிய பேருந்துத் தயாரிப்பாளர்களில் ஒன்றாக இருந்து, 2003 இல் மூடப்பட்டது. அந்த நிறுவனத்துக்காக உலகப் பிரபலமான வாகன வடிவமைப்பாளர் லஸ்லோ பின்டாவின் வடிவமைப்பில் உண்டாக்கப்பட்ட 200 என்று ஆரம்பிக்கும் பேருந்துகள் அதன் அழக்குக்காக உலகெங்கும் பரிசுகள் பெ,ற்றவை. அவை அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் பரவலாகப் பாவிக்கப்பட்டவை.
இக்காருஸ் பேருந்துகளை,ச் சேவையிலிருந்து நிறுத்தும் நாள் புடாபெஸ்ட்டில் விழாவாக நடத்தப்பட்டு. நகரச் சதுக்கத்தில் அந்த வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட, நகர மக்கள் அங்கே வந்து அவைகளுடன் படங்களை எடுத்துப் பிரியாவிடை பெற்றுக்கொண்டனர்.
சாள்ஸ் ஜெ. போமன்