தடுப்பு மருந்தால் கறைபடிந்த இரத்தத்தைப் பாவித்துத் தம் குழந்தை உயிர்காக்க மறுக்கும் பெற்றோர்.
நியூசிலாந்தில் ஒரு நாலு மாதக் குழந்தையின் பெற்றோர் தமது பிள்ளையின் உயிரைக் காக்கும் சிகிச்சையில் தடுப்பு மருந்துக் கறைபடிந்த இரத்தம் பாவிக்கலாகாது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இருதயத்தைத் திறந்து சிகிச்சை செய்து காப்பாற்ற வேண்டிய நிலையிலுள்ள அக்குழந்தையின் பாதுகாவலர் உரிமையைத் தற்காலிகமாகப் பெற்றோரிடமிருந்து பறித்தெடுக்கப் போவதாக நாட்டின் மக்கள் ஆரோக்கியத் திணைக்களம் எச்சரித்திருக்கிறது.
நவம்பர் 28 ம் திகதி பெற்றோரிடமிருந்து பாதுகாவலர் உரிமையை எடுத்துக்கொள்ள மருத்துவ சேவையினர் நீதிமன்றத்தில் கோரியிருக்கிறார்கள். ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டபோது நூற்றுக்கும் அதிகமான தடுப்பு மருந்து மறுப்பாளர்கள் நீதிமன்றத்தின் முன்னால் கூடினார்கள். அதுபற்றிய முழு விசாரணையை டிசம்பர் 06 ம் திகதியன்று உயர் நீதிமன்றம் நடத்தியது. அச்சமயத்திலும் கூட்டமொன்று பெற்றோருக்கு ஆதரவாகக் கூடியிருந்தது.
“சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் தமக்குத் தேவையானதைத் தெரிந்துகொள்ளும் உரிமை இருக்கிறது. நாம் சாதாரண இரத்தத்தை எங்கள் குழந்தைக்குப் பாவிக்கலாகாது என்கிறோம். அது குழந்தையின் தெரிவுசெய்யும் உரிமையைப் பறிக்கிறது. கறைபடிந்த இரத்தத்தைப் பாவிப்பதால் விளைவு என்னாகும் என்ற நிலைமை தெரியாத நிலையில் அரசு எங்கள் குழந்தை மீது பரிசீலனை செய்ய நாம் அனுமதிக்கமாட்டோம்,” என்று தொலைக்காட்சிச் செவ்வி ஒன்றில் பெற்றோர் தமது வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள்.
“சாதாரண இரத்தம்” என்று பெற்றோருக்காக வாதிடும் தடுப்பு மருந்து இயக்கத்தினர் தம்மிடம் சுமார் 30 பேர் “சுத்தமான இரத்தம்” தரத் தயாராக இருக்கிறார்கள் என்கிறது. இதுபோன்று வாதாடும் வேறு சிலரையும் சந்தித்திருப்பதாகக் குறிப்பிடும் நகரின் மருத்துவ சேவை உயரதிகாரி இப்பிரச்சினை எழாவிட்டால் இரண்டு வாரங்களுக்கு முன்னரே குழந்தைக்குச் சிகிச்சை நிறைவு பெற்றிருக்கும் என்கிறார்.
நீதிமன்றத்தில் பெற்றோரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. “மருத்துவ காரணங்களுக்காக” குழந்தையின் பாதுகாவலர் என்ற உரிமை நாட்டின் மக்கள் ஆரோக்கிய சேவையினர் புதன்கிழமையன்று பெற்றுக்கொண்டனர். குழந்தையின் மற்றைய உரிமைகள் தொடர்ந்தும் பெற்றோரிடம் இருக்கும். திட்டமிட்டபடி குழந்தையின் சத்திர சிகிச்சை நடாத்தப்பட்டு அதைத் தொடர்ந்த மருத்துவ தேவைகளும் கவனிக்கப்பட்ட பின்னர் ஜனவரி மாதம் அளவில் அக்குழந்தை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். அதுவரை பெற்றோருக்குக் குழந்தையின் நிலைமை பற்றிய விபரங்களை மருத்துவ சேவையினர் அறிவிப்பார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்