குட்டையானவன், வெண்ணெய்ப்பழத்தலையன் என்று பழிக்கப்பட்ட வலீட் ரெக்ராகூய் கத்தாரில் கொடுத்த பதில்.
கத்தாரில் இவ்வார இறுதியில் உலகக் கோப்பை மோதல்கள் நிறைவடையும்போது அம்மோதல்களைப் பற்றிய நினைவுகள் மறைந்து போகலாம், ஆனால், ஆபிரிக்காக் கண்டம் உதைபந்தாட்ட விளையாட்டில் தனது பெயரைப் பொன்னெழுத்துக்களால் பொறித்ததை எவரும் மறக்கப்போவதில்லை. மோதல்களின் முதல் கட்டங்களில் தான் எதிர்கொண்ட பெல்ஜியம், கிரவேசியா, ஸ்பெய்ன், போர்த்துக்கால் அணிகளை வீழ்த்தி முதல் தடவையாக ஒரு ஆபிரிக்க அணி அரையிறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறதென்றால் அது மொரொக்கோ அணியேயாகும்.
உதைபந்தாட்ட உலகே கண்களை அகல விரித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் மொரொக்கோ அணியினர் வெற்றி பெற்றது மட்டுமன்றி தமது வலைக்குள் எதிராளிகள் பந்தைப் போட விடாமலே விளையாடி வென்றிருக்கிறார்கள். அதற்குக் காரணமானவர்களென்று பலர் குறிப்பிடப்பட்டாலும், தன் நாட்டவராலேயே இழிவுசெய்யப்பட்ட நிலையிலும் மோதல்களுக்கு மூன்றே மூன்று மாதங்களுக்கு முன்னர் மொரொக்கோவின் அணியைத் தேர்ந்தெடுத்துச் செதுக்கிய வலீட் ரெக்ராகூய் [Walid Regragui] அவர்களில் அதி முக்கியமானவர்.
மொரொக்கோ அணியினர் கத்தார்2022 இல் பங்குபற்றுவார்கள் என்பது ஆகஸ்ட் மாதத்தில் முடிவாகியிருந்தது. அதனால் நாட்டின் உதைபந்தாட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் நிலையோ இல்லை. காரணம் அக்குழுவின் பயிற்றுனராக, நிர்வாகியாக இருந்த பொஸ்னியரான வகீட் ஹலிகோட்சிச் [Vahid Halilhodzic] அணியின் முக்கிய வீரரொருவரோடு ஏற்பட்ட தகராறுகளால் கோபமடைந்து பதவியை விட்டு விலகியிருந்தார். வழிநடத்த எவருமற்ற அணியாக நடுத்தெருவில் நின்றது மொரொக்கோ அணி.
மொரொக்கோவின் உதைபந்தாட்டத் தலைமை அமைப்பு அச்சமயத்தில் அவசர அவசரமாக ஒருவரைத் தேர்ந்தெடுத்தது. பிரான்ஸில் பிறந்து வளர்ந்த 47 வயதான வலீட் ரெக்ராகூய் தான் அவர். மொரொக்கோ அணிக்காக AFCON கோப்பை மோதல்களில் 2004 இல் விளையாடியிருக்கிறார் ரெக்ராகூய். கடைசி மோதலில் அவர்கள் துனீசியாவுடன் தோல்வியடைந்தனர்.
மொரொக்கோ உதைபந்தாட்ட அணியான Wydad AC இன் நிர்வாகியாக இருந்தவர் ரெக்ராகூய். அந்த அணி சில வாரங்களுக்கு முன்னர் தான் நாட்டின் உதைபந்தாட்டக் கோப்பையை வெல்லும் மோதலில் தோற்றிருந்தது. எனவே, ரெக்ராகூய் தெரிவானது சகல கோணங்களிலிருந்தும் சாடப்பட்டது. வெளிநாட்டில் பிறந்தவர், வெண்ணெய்த்தலையன், குட்டையன் என்றெல்லாம் நாட்டின் ஊடகங்களில் அவர் விமர்சிக்கப்பட்டார். ‘கத்தாரில் போய்த் தோற்றுப்போவதற்கு இவரைத் தவிரப் பொருத்தமானவர் வேறெவருமில்லை,’ என்ற முத்திரை குத்தப்பட்டுத் தனது அணியைச் செதுக்கினார் அவர்.
தனக்கு முன்னர் அணியின் நிர்வாகியாக இருந்த வகீட் ஹலிகோட்சிச் உடன் மோதிக்கொண்டு வெளியேறியவர்களில் திறமையானவர்களைத் திரும்பக் கொண்டுவந்தார். ஹலிகோட்சிச் விசுவாசிகளில் பொருந்தாதவர்களை வெளியேற்றினார். ரெக்ராகூய் தனது மொரொக்கோ அணியைத் தேர்ந்தெடுத்து அறிவித்தபோது அதிலிருந்த 14 பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். கத்தாரில் எந்தவித வெற்றியையும் எதிர்பார்க்காத மொரொக்கோ ஊடகங்கள் “எதற்காக இவர் வெளிநாட்டவர்களை அணியில் சேர்க்கிறார், மொரொக்கர்களையல்லவா வைத்து விளையாடவேண்டும்?” என்று சாடின.
ஹக்கீம் சியேச் நெதர்லாந்தில் பிறந்து வளர்ந்து அந்த நாட்டுத் தேசிய அணிக்கு விளையாடும்படி கேட்கப்பட்டவர், ஸ்பெய்னில் பிறந்து வளர்ந்தவர் அஷ்ரப் ஹக்கீமி, அப்துல்ஹமீத் சபீரி ஜேர்மனியில் பிறந்தவர், வலைகாப்பவரான யசீன் போனோவைக் கனடிய அணி தனக்காக விளையாடும்படி கேட்டிருந்தது.
“எந்த அணிக்கு விளையாடுவதென்பதை நாம் மூளையால் தெரிவுசெய்வதில்லை, இருதயம் எங்கே நாடுகிறதோ அந்த நாட்டுக்காக விளையாடவே விரும்புகிறோம்,” என்று நெதர்லாந்துக்காகத் தான் விளையாட மறுத்ததை விமர்சித்தவர்களுக்குப் பதில் கொடுத்திருந்தார் ஹக்கீம் சியேச்.
கத்தாரில் விளையாடும் சமயத்தில் தங்குமிடங்களை ஒழுங்குசெய்ய கத்தார் அரசு திட்டமிட்டபோது வலீட் ரெக்ராகூய் எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். சகல வீரர்களின் குடும்பங்களுக்கும் அதே ஹோட்டலில் [West Bay] தங்க இடங்கள் வேண்டுமென்றார். அப்படியே ஏற்பாடும் செய்யப்பட்டது. மொரொக்கோ வீரர்களின் தாய்மார் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பெருமையாகத் தமது பிள்ளைகளுடன் திரிவதை அதனால்தான் உலகம் காணமுடிகிறது. ஸ்பெய்னுக்கு எதிரான முக்கியமான கோலைப் போட்ட அஷ்ரப் ஹக்கீமியின் தாயார் மகனுக்குக் கொடுத்த முத்தம் பிரபலமானது.
“நான் 50 வருடங்களாகப் பிரான்சில் வாழ்ந்து வருகிறேன். முதல் தடவையாக பாரிசுக்கு வெளியே இப்போதுதான் ஒரு உதைபந்தாட்ட நிகழ்ச்சியைக் காணக் கிடைத்திருக்கிறது,” என்று குறிப்பிட்டார் ஹக்கீமியின் தாயார்.
மொரொக்கோவின் வீரர்கள் வெவ்வேறு நாடுகளில் பிறந்து வெவ்வேறு சர்வதேச அணிகளால் பொறுக்கியெடுக்கப்பட்டுப் பழக்கப்பட்டுச் செதுக்கப்பட்டவர்கள். அப்படியானவர்கள் தமது தாய்நாட்டுக்காக போட்டியில் பங்குபற்றும்போது முழுமனத்துடன், உயிரையே கொடுக்கிறார்கள் என்கிறார் ரெக்ராகூய். திறமைகளிருப்பினும் வெளிநாடுகளில் பிறந்தவர்களைத் தாய்நாட்டுக்காகத் தெரிந்தெடுத்து நல்ல முடிவு கிடைக்காவிட்டால் அது ரெக்ராகூயை ஒரேயடியாக வீழ்த்தியிருக்கும்.
காலிறுதி மோதலில் 2018 உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸை எதிர்கொள்ளப் போகிறது மொரொக்கோ. அதில் அவர்கள் வெற்றிபெறலாம், அல்லது தோற்றுப் போகலாம் எப்படியானாலும் தனது நாட்டுக்காக சரித்திரம் படைத்திருக்கும் வலீட் ரெக்ராகூய் பெறுமதி உதைபந்தாட்ட உலகில் பெருமளவில் உயர்ந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்