விடுமுறைக் காலமும் வீதி விபத்துக்களும்
இந்த வார இறுதியுடன் பல மேற்குலக நாடுகளில் விடுமுறைக் காலம் ஆரம்பமாகிறது. உறவினர்களோடு விடுமுறையைக் கழிக்க கணிசமானோர் நாடு விட்டு நாடு செல்வார்கள். ஏனையவர்கள் உள்ளூரிலேயே மாலை விருந்துகள், களியாட்டங்களுக்கு இப்பொழுதிலிருந்தே தயாராகிக் கொண்டிருப்பார்கள். நீங்களும் இப்படியான கேளிக்கை விருந்துகளுக்கு தற்போது தயாராகக் கூடும். இவ்வாறான விடுமுறைக் கொண்ட்டாட்டம் என்று வரும்போது அங்கு மது விருந்துகளுக்கும் குறைவிருப்பதில்லை.. இதனாலேயே மது அருந்திவிட்டு வாகனமோட்டுபவர்களால் அதிக விபத்துகள் ஏற்படுவதும் இவ்வாறான விடுமுறைக் காலத்தில்தான்.
இன்று உலகில் பலநாடுகளில் மது அருந்திவிட்டு அல்லது போதைப் பொருள் பாவித்த பின்னர் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துடன் போதையின் அளவைக் பொறுத்து சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக தடை செய்யப்படவும் பாரதூரமான சந்தர்ப்பத்தில் நிரந்தரமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்கவும் நேரிடலாம்.
அதனைவிட முக்கியமானது, குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவதால் ஏற்படக்கூடிய வீதி விபத்துகளும் அதனால் ஏற்படக்கூடிய உயிரழப்புக்களுமாகும். உலகில் வருடாந்தம் 1.25 மில்லியன் பேர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கிறார்கள். அவர்களுள் 22 வீதமானவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழக்கிறார்கள். இந்த சதவீதம் வளர்ச்சியடைந்த நாடுகளில் 30 – 40 வீதமாகக் காணப்படுகிறது.
எங்களில் சிலருக்குத் தம்மில் அதீத தன்னம்பிக்கை. தாங்கள் மூக்கு முட்டக் குடித்தாலும் தங்களால் எந்தப் பிரச்சனையும் இல்லாது வாகனம் ஓட்ட முடியும் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் போதையில் வாகனம் ஓடும்போது சாரதிக்கு வாகனம் ஓட்டுவதில் முழுக் கவனம் செலுத்த முடியாது. எதிரில் வரும் வாகனம் எவ்வளவு தூரத்தில் வருகிறது என்பது சரியாகக் கணிக்க முடியாது. என்ன வேகத்தில் வருகிறது என்பதையும் கணிக்க முடியாது போகும்.
முக்கியமாக, ஒரு விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் அதனை தவிர்ப்பதற்குரிய எதிர்வினை ஆற்றுவதற்கு சாதாரணமாக தேவைப்படும் நேரத்தைவிட அதிக நேரம் தேவைப்படும்.உதாரணமாக, உங்கள் இரத்தத்தில் BAC level 0.08 ஆக இருக்கும்போது உங்கள் வாகனத்தை சடுதியாக நிறுத்த வேண்டும் என்றால் வழமையைவிட உங்களுக்கு மேலதிகமாக 120 மில்லி செக்கன்ஸ் தேவைப்படும். நீங்கள் வேக நெடுஞ்சாலையில் 110 km/h வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு விபத்தைத் தடுக்க வாகனத்தை நிறுத்த முயற்சிக்கும்போது வழமையைவிட மேலதிகமாக 12 அடிகள் சென்றுதான் உங்கள் வாகனம் நிற்கும். அப்படியென்றால் தாராளமாக மூக்கு முட்டக் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் நிலையை நினைத்துப் பாருங்கள்.
இதனைவிட முக்கியமான ஒரு விடயம், இவ்வாறு மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்கள் பெரும்பாலும் காயங்களுடன் தப்பிவிட, அவர்களுடன் பயணிப்பவர்களும், வாகனம் ஓட்டுபவரால் மோதுண்டவர்கள்தான் பெரும்பாலும் உயிரிழப்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது அங்கவீனர்களாக மாற்றப்படுகிறார்கள்.
இவ்வாறு விபத்தினை ஏற்படுத்தி இன்னொருவரின் இறப்புக்குக் காரணமாக இருக்கும் ஒருவர், சட்ட உதவியுடன் சிறு தண்டனையுடன் வெளிவர முடியும். ஆனால் உங்களால் ஒருவர் கொல்லப்பட்டார் என்ற விடயம் காலம் முழுவதும் உங்களைத் தொடர்ந்து துரத்தி வருவதுடன் உங்கள் வாழ்வில் மன அமைதியை இல்லாமல் செய்துவிடக் கூடும்.
பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் நண்பர்களுடன் சந்தோசமாக மது அருந்துவதும் உங்கள் தெரிவு. ஆனால் மது அருந்துவது என்று முடிவெடுத்து விட்டால், தயவுசெய்து அன்று வாகனம் ஓட்டாதீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்து விடுங்கள். அல்லது ஒரு டாக்ஸி ஒழுங்கு செய்து அதில் வீட்டுக்குச் செல்லுங்கள்.
எனவே, விடுமுறை காலம் அண்மித்த நிலையில், உங்கள் அனைவரையும் பொறுப்புடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இனிமையான நினைவுகளை மட்டும் இந்த விடுமுறைக் காலத்தில் பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.!
If you choose to drink, don’t drive. If you have to drive after a party, please don’t drink.