தங்கத் தகடுகளால் மூடப்பட்டுப் பிரேதப்பெட்டியொன்றுக்குள் உடலொன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
எகிப்தின் சக்காரா நகரத்தில் இதுவரை திறக்கப்படாத பிரமிட் ஒன்றுக்குள்ளிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மம்மி ஒன்று சர்வதேச அளவில் முக்கிய செய்தியாகியிருக்கிறது. சுமார் 4,300 வருடங்களாகத் திறக்கப்படாத ஒரு கல்லறைக்குள் இருந்து எடுக்கப்பட்ட அந்தப் பாதுகாக்கப்பட்ட உடலானது தங்கத் தகடுகளுக்குள் வைத்து மூடப்பட்டிருந்தது.
கல்லறைக்குள் எகிப்திய மதகுருக்கள், உதவியாளர்களின் சிலைகள் பல உட்பட பாதுகாக்கப்பட்டுப் பேணப்பட்ட சடலமும் காணப்பட்டது. அந்தக் கல்லறைக்குள் மேலும் பல பொருட்கள் இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சி தொடருவதாகவும் குறிப்பிடப்பட்டது. பாதுகாக்கப்பட்ட உடல் பற்றிய விபரங்களை முன்னால் எகிப்திய அமைச்சர் ஸாஹி ஹவாஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
பாதுகாக்கப்பட்ட உடல் ஹெக்காஷேப்பஸ் என்ற ஒரு நபருடையது. அந்த நபர் ஒரு பாரோ அல்ல என்ற விபரமும் தெரியவந்திருக்கிறது. சமீபகாலத்தில் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளுக்குள் பாதுகாக்கப்பட்ட உடல்களில் இந்த உடலே மிகவும் முழுமையாக இருந்தது. குறிப்பிட்ட கல்லறைக்குள் 15 மீற்றர் ஆழத்தில் அது பாதுகாக்கப்பட்டு வந்தது. அதற்குப் பக்கத்திலிருந்த மற்றைய கல்லறைகளிலிருந்து மேலும் 4 உடல்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்