நண்பர்களுடன் விளையாட்டுக்காக பங்களாதேஷில் ஒளித்த பையன் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டான்.

ஒளிச்சுப்பிடிச்சு விளையாடும் விளையாட்டில் நண்பர்களுடன் பங்குபற்றிக்கொண்டிருந்த ஒருவர் ஒளிப்பதற்காகப் பதுங்கிய இடத்தில் தூங்கினால் என்னாகும்? விழித்தெழுந்தவரை இன்னொரு நாட்டில் கண்டுபிடித்தார்கள். ஒளித்த இடம் பங்களாதேஷ், ஒளித்தவரைக் கண்டுபிடித்த இடமோ மலேசியா.

பங்களாதேஷின் துறைமுக நகரமான சிட்டகொங்கில் இது ஒரு பையனுக்கு நடந்திருக்கிறது. 15 வயதான பையன் துறைமுகத்திலிருந்த கப்பல்களிலொன்றில் ஏறி அதற்குள் ஒளிந்துகொண்டான், தூங்கிவிட்டான். ஜனவரி பதினோராம் திகதி இது நடந்திருக்கிறது. 17ம் திகதியன்று மலேசியாவின் கிளாங்க் துறைமுகத்துக்கு வந்துசேர்ந்த சரக்குக்கப்பலைப் பரிசோதனை செய்த அதிகாரிகள் அந்தப் பையனைக் கண்டபோது அவனது உடல்நிலை பலவீனமாக இருப்பினும் இறக்கவில்லை.

தான் மாட்டிக்கொண்டதை அறிந்து கத்திக்குழறிய பையன் நீர், ஆகாரம் ஏதுமின்றியே ஆறு நாட்களைக் கழித்திருக்கிறான். கண்டுபிடித்த அதிகாரிகள் அவனது விபரங்களை நம்பவில்லை. மனிதக் கடத்தல்காரர்கள் அப்பையனைக் கடத்தியிருப்பதாகவே எண்ணி விசாரணையை ஆரம்பித்தார்கள். அதன் பின்னரே அவன் சொன்னது உண்மையென்று தெரியவந்தது.

கண்டுபிடிக்கப்பட்ட பையன் மலேசியாவில் மருத்துவ உதவிகள் பெற்று வருகிறான். அவன் தேறியபின்னரே அவனது நாட்டுக்கு அனுப்பப்படுவான். 2022 இல் அதே இடத்திலிருந்து புறப்பட்டு மலேசியாவுக்கு வந்த கப்பலுக்குள் ஒரு இறந்துபோன மனிதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *