பாபுவாவில் தனிநாடு கோரும் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்களால் நியூசிலாந்து விமானியொருவர் கடத்தப்பட்டார்.
ஐந்து பயணிகளுடன் சுசி எயார் விமானமொன்றை பாபுவாவின் மலைப்பிரதேசமொன்றில் இறக்கியபின்னர் அதை ஓட்டிவந்த நியூசிலாந்து விமானியை மேற்கு பாபுவா தேசிய விடுதலை அமைப்பினர் (TPNPB) கடத்திச் சென்று பணயக்கைதியாக்கியிருக்கிறார்கள். இந்தோனேசியாவின் பகுதியாக இருக்கும் அப்பிராந்தியத்தில் வாழ்பவர்கள் தனி நாட்டுக் கோரிக்கையை வெளிப்படுத்தும் தாக்குதல்களில் சமீப காலத்தில் அடிக்கடி ஈடுபட்டு வருகிறார்கள். பிலிப் மெர்த்தன்ஸ் என்ற அந்த விமானியுடன் பயணித்த ஐவரும் கூடக் கைதியாகியிருக்கிறார்களா என்பது இன்னும் தெரியவில்லை.
மெலனீசியர்கள் எனப்படும் பழங்குடியினர் பத்தாயிரத்துக்கும் அதிகமான வருடங்களும் பகுதி பாபுவா. 1898 இல் நெதர்லாந்தால் கைப்பற்றப்பட்டு அவர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தோனேசியா 1949 இல் சுதந்திரம் பெற்றபோது பாபுவா மக்களின் தனித்தன்மை கருதி அவர்களைத் தனியான நாடாகவே நெதர்லாந்து கையாண்டது. அவர்களைத் ஒரு நாடாகப் பிரகடனப்படுத்தத் தயார்செய்து 1961 இல் அது ஒரு நாடாகியது.
இயற்கை வளங்கள் நிறைந்த பாபுவா பகுதியையும் இந்தோனேசியா தனதே என்று குறிப்பிட்டு அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி சில மாதங்களிலேயே ஆக்கிரமித்துத் தனதாக்கியது. அப்பகுதி மக்களை மிகக்கொடுமையாக நடத்தியது. எதிர்த்தவர்கள் சித்திரவதைக்கும், கொலைகளுக்கும் ஆளானார்கள். 1969 வரை பாபுவா மக்களின் எதிர்ப்புகள் தொடர்ந்தன.
அச்சமயத்தில் குறுக்கிட்ட ஐ.நா-வின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றின் விளைவாக இந்தோனேசியாவின் பாகமாக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்தத் தேர்தலில் ஐ.நா-வின் பிரதிநிதிகள் இரகசியமாக இந்தோனேசியாவே வெற்றியெடுக்கக்கூடியவகையில் தேர்தலை நடத்தினார்கள். அதன் மூலம் இந்தோனேசியாவுக்குத் தொலைவிலிருக்கும் அப்படுதியும் இந்தோனேசியாவின் பாகமானது.
நியூசிலாந்து விமானியைக் கைப்பற்றிப் பணயக்கைதியாக்கியிருக்கும் அமைப்பினர் தமது நாட்டினரின் தனிநாட்டுக் கோரிக்கையை அங்கீகரித்தாலே விமானியை விடுவிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். விமானம் இறங்கிய பிராந்தியம் மலைப்பகுதியும், கடினமான புவியியலைக் கொண்ட பகுதியுமாக இருப்பதால் தம்மால் உடனடியாக எதுவும் செய்யமுடியாதென்று இந்தோனேசிய பொலீஸ் தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்