சிறீலங்காவின் ஒட்டாண்டி நிலைமை மேலும் மூன்று வருடங்களுக்குத் தொடரும் என்கிறார் ஜனாதிபதி ரணில்.
சிறிலங்கா பாராளுமன்றத் தொடரின் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, “அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வரிகள் எனக்கு எதிர்ப்புக்களையே தரும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், பிரபலம் தேடி நான் இங்கே வரவில்லை. நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அதை மீட்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே வந்திருக்கிறேன். நாங்கள் செய்துவரும் பொருளாதார மாற்றங்களை வெற்றிகரமாகத் தொடருவோமானால் மூன்று வருடங்களில் திவாலாகியிருக்கும் நிலைமையிலிருந்து எங்கள் நாட்டை விடுவிக்க முடியும்,” என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு சிறீலங்கா தனது வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாமல், அதற்கான வட்டியையும் கட்ட முடியாமல் திவால் நிலைக்கு வந்தது. நாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக எதையுமே இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அரசின் நிதிப்பெட்டி காலியாகியிருந்தது. அதனால் மக்களுக்கு ஏற்பட்ட கோபம் ஒரு எழுச்சியாக மாறி ஆட்சியாளர்களைத் துரத்தியடித்த சமயத்தில் தற்காலிக தீர்வாகவே தற்போதைய ஜனாதிபதி பதவியேற்றார்.
கடந்த வருடத்தில் சிறீலங்காவின் பொருளாதாரம் சுமார் 11 விகிதத்தால் சுருங்கியதாகவும் அது தொடர்ந்தும் இவ்வருடம் கடுமையான தாக்கங்களையே நேரிடும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி இவ்வருட இறுதியில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளரும் நிலைமைக்குத் திரும்பும் என்று குறிப்பிட்டார். அதற்காக அரசாங்க நிதியை அதிகரிக்கவேண்டும் என்றும் புதிய வரிகளை அறிமுகப்படுத்தக் காரணம் அதுவே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பாராளுமன்றத்துக்கு வெளியே, தலை நகரில் நாட்டின் தொழிற்சங்கங்கள் அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வரிகளை எதிர்த்துக் குரலெழுப்பிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். எதிர்ப்பாளர்களின் ஊர்வலம் கொழும்புத் துறைமுகப்பகுதியில் ஏற்படுத்திய பதட்ட நிலைமையைத் தடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் சிறீலங்கா தனது ஒட்டாண்டி நிலைமையிலிருந்து வெளியேறிவரும் காலத்தில் தப்புவதற்காக 2.9 பில்லியன் டொலர்களைக் கடனாகக் கேட்டிருக்கிறது. அக்கடனைப் பெறுவதற்கான நிபந்தனையாக சிறீலங்கா தான் கடன் வாங்கியவர்களிடம் கெடு வாங்கி ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டிருக்கிறது. கடன்கொடுத்தவர்களில் முக்கியமானவர்களான சீனாவிடம் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவ்விடயத்தில் சாதகமான பதில்களைத் தான் பெற்றுவருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்
டார்.
சாள்ஸ் ஜெ. போமன்