இந்தியாவுக்குள் இலங்கை – இலங்கைக்குள் இந்தியா – 2
கடந்த வருடம் அழகாக அரசியல் பேசி ஆழம் பார்த்துச் சென்ற அண்ணாமலை தற்போது மீண்டும் இந்த வருடம் வடக்கில் இந்திய அரசு கட்டிக் கொடுத்த கலாச்சார மத்திய நிலையத்தைத் திறந்து வைக்க அண்மையில் வந்திருந்தார். அதன்போது அவர் யாழில் நடைபெற்ற கம்பன் விழாவிலும் கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் பாலாலிக்குச் சொன்ன விளக்கத்தை நாங்கள் நையாண்டி பண்ணி மகிழ்ந்து கொள்கிறோம். ஆனால் அவர் அங்கு கூறிய சில விடயங்களை நாம் கட்டாயம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் இலங்கை இணைந்தது என்று சொல்கிறார். இராமர் பாலத்தையும் மேற்கோள் காட்டுகிறார். மன்னார் இராமபூமி, பலாலி என்ற பிரதேசம் இராமபூமி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவு செய்கிறார். இராமர் பிரம்மஹத்தி தோஷம் நிறைவேற்ற பூசை செய்த இடம் கேதீஸ்வரம் என்று கூறி வரலாற்றையும் மாற்றுகிறார். இவ்வாறு பல விடயங்களை நிறுவி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள வலாற்றுப் பிணைப்பு உறுதியானது என்கிறார். அது மட்டுமன்றி இனிவரும் நாட்களில் அந்தப் பிணைப்பு மேலும் அதிகரிக்கும் என்கிறார்.
இலங்கையில் கடந்த சில வருடங்களில் இந்தியா செய்துவரும் அபிவிருத்தித் திட்டங்கள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டு இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை இன்று இந்தியாவே செய்கிறது என்றும் கூறியிருக்கிறார். இலங்கை, குறிப்பாக வடக்குக் கிழக்கு இந்தியாவின் ஒரு மாநிலம் என்று சொல்லாது மட்டும்தான் மிச்சம். அதேநேரம் பலாலியை இராமரோடு தொடர்பு படுத்தியதில் ஏதாவது உள்நோக்கமும் இருக்கலாம்.
மோடி அரசு கருணைகூர்ந்து இந்தியாவிலேயே இல்லாத அளவு பெரியதொரு கலாச்சார நிலையத்தை யாழ்ப்பாணத்தில் கட்டி தமிழ் மக்களுக்கு பேருபகாரம் செய்ததாகக் கூறும் அண்ணாமலை அந்தப் பிணைப்பை உறுதிப்படுத்தக் கட்டியதே அந்தக் கலாச்சார நிலையம் என்று கூறி முடித்தார். அது பிணைப்பை வலுப்படுத்துமா அல்லது இனிவரும் நாட்களில் இலங்கையில் இந்தியத் தலையீட்டுக்கான திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் இந்தக் கலாச்சார மண்டபத்திலிருந்தே செய்யப்படுமா என்பதை காலம்தான் சொல்லும்.
இதற்கிடையில் அண்ணாமலையை யாழ்ப்பாணத்தில் சந்தித்த கம்பன் கழக தூண்களில் ஒருவரான ஆறுதிருமுருகன், கிழக்கிலும் ஒரு துணைத் தூதரகத்தைத் திறந்து இந்தியா கோணேஸ்வரரைக் காப்பாற்ற வேண்டும் என்று அண்ணாமலை காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கேட்டுள்ளார். இலங்கைப் பிரச்சனையைத் தீர்த்து தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
வழமையாக இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து அரசியல்வாதிகள் வந்தால் இங்குள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்களை சந்தித்து அதற்கு ஊடக வெளிச்சம் கொடுப்பதே வழக்கம். ஆனால் இந்தமுறை அண்ணாமலையார் ராமனையும் கம்பனையும் வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்துக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்தியா கடந்த காலங்களில் இலங்கை அரசையும் தமிழ் அரசியல்வாதிகளையும் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. இந்த நிலையில் மோடி அரசு ராமர் ஊடாக மதத்தை ஆயுதமாக்கி வடக்குக் கிழக்கில் தனது கால்களைப் பலமாக ஊன்ற முயற்சிப்பதாகவே தெரிகிறது. அதற்கு அவர்களுக்கு உள்ள நல்ல தெரிவுதான் ஏற்கனவே பேச்சாளர்களைக் கொண்ட கம்பன் கழகம்.
கடந்த சில வருடாங்கலாகக் கம்பன் கழகம் அரசியல் பேசுவதும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. அதிலும் தற்போது ஆறுதிருமுருகன் அரசியல் பேசுவதும் திடீரென்று ஈழத்தமிழரின் ambassador ஆவதும் கொஞ்சம் ஆராயப்பட வேண்டியதே. அவர்கள் ஏன் அரசியல் பேசக்கூடாது என்று உங்களில் சிலர் கேட்கலாம். அவர்கள் அரசியல் பேசுவதில் தவறில்லை, ஆனால் ஆறுதிருமுருகன் அண்ணாமலையிடம், நாங்களும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்தான் என்று நல்லை ஆதீனத்தில் பேசியதுதான் ஏற்க முடியாத முட்டாள்தனம். ஏனெனில் இலங்கையில் இருக்கும் தமிழரில் கணிசமானோர் இந்தியாவிலிருந்து வந்திருந்தாலும் நாகர் வழி வந்தவர்களும் இலங்கையில் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களோ ஏற்கனவே சிங்களப் பேரினவாதிகளின் “தமிழர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்” என்ற வாதத்திற்கு வலுச் சேர்க்கும் முட்டாள்தனத்தை எம்மவர்களே செய்வதுதான் வேதனைக்குரியது.
2009இல் இறுதிப் போர் முடிந்த அடுத்த வருடமே (2010 நவம்பர்) யாழிலும் அம்பாந்தோட்டையிலும் இந்திய துணைத் தூதரகங்கள் திறக்கப்பட்டிருந்தன. இவ்வளவு சிறிய ஒரு நாட்டில் இந்தியாவிற்கு ஏற்கனவே நான்கு தூதரகங்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவது துணைத் தூதரகம் திறக்க எமது தமிழர்களே வழியமைத்துக் கொடுப்பதாகவே கம்பன் கழகத்தின் கோரிக்கை அமையப் போகிறது. அவ்வாறு கிழக்கில் இன்னொரு துணைத் தூதரகம் அமைந்தாலும் அது இந்திய நலன்களுக்கு வலுச் சேர்க்குமேயன்றி ஈழத் தமிழருக்கு எதுவித நன்மையையும் தரப்போவதில்லை.
ஆனால் எங்களில் சிலர் இன்றும் இந்தியாவுடனான வர்த்தக, பொருளாதார பிணைப்புகள் இலங்கையின் வடக்கு, கிழக்கின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும் என்று நம்புகிறார்கள். ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது கேள்விக்குரியதே. தொண்ணூறுகளில் இலங்கை அரசு இலங்கையின் தேயிலை, இறப்பர் தோட்டங்களை 90 வருடக் குத்தகைக்கு விட்டபோது அவற்றைப் பெற்றுக்கொண்ட பல இந்தியக் கம்பனிகளால் இந்த 30 வருடங்களில் எதுவித விசேட நன்மையையும் பெற்றுத் தரவில்லை என்பதே யதார்த்தம்.
இப்படியிருக்க இனிவரும் காலத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் வடக்குக் கிழக்கில் முதலீடு செய்வதால் மட்டும் வடக்கு-கிழக்கிற்கு நன்மை கிடைத்துவிடும் என்பதற்கு எந்த நிச்சயமும் கிடையாது. மாறாக அது இந்தியாவிற்கும் அந்த இந்தியக் கம்பனிகளுக்கும் மட்டுமே நன்மை தருவதாகவே அமையப் போகிறது. இந்தியா நேரடியாக இலங்கையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்காவிட்டாலும் சீனாவுக்குப் போட்டியாக எமது வளத்தை உறுஞ்சி தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்தத் திட்டமிடுகிறது என்பது மட்டும் நிச்சயம். இது தொடர்பில் ஈழத் தமிழர் விழிப்புடன் செயற்படாத வகையில் கவனக் கலைப்பானாக மறவன் புலவு சச்சிதானந்தம், கம்பவாரிதி ஜெயராஜ் போன்றவர்களைப் பயன்படுத்தி இந்து – கிறிஸ்தவ முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி வடக்குக் கிழக்கில் தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் மோதும் நிலையைத் தொடர்ந்து பேணினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
எழுதுவது : வீமன்