அய்யனும் அவன் மேல் ஐயமும்!

தமிழ் கூறும் நல்லுலகில் அய்யன் வள்ளுவன் அவர் இயற்றிய திருக்குறளுக்காக இன்றளவும் கொண்டாடப்படுகிறார். உலகில் இதுவரை 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலாகவும் மதசார்பற்ற நூலாகவும் திருக்குறள் விளங்குகிறது. ஆனால் ஐயம் திரிபறக் கற்கும்படியும், எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காணவும் சொன்ன வள்ளுவன் யார் என்பதில்தான் எங்களுக்கு இன்னமும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. அவன் வள்ளுவன் மறைந்து 2000 ஆண்டுகள் கடந்த பின்னரும் இதற்கு ஒரு முடிவு வரவில்லை.

உண்மையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர் எப்போது வாழ்ந்தார் என்பதற்கு யாரிடமும் ஆதாரமில்லை. அதேபோல அவரது தோற்றம் தொடர்பாக அறிந்தவரும் யாருமில்லை. ஆனால் இன்று அவரைச் இந்து சமயத்தவர் என்று ஒரு சாராரும் சமணர் என்று இன்னொரு சாராரும் இன்றுவரை வாதிட்டு வருகிறார்கள். ஆசீவகம் என்று விவாதிப்போரும் உண்டு. இவர்களுக்குப் போட்டியாக அவரைக் கிறிஸ்தவர் என்று சொல்வோரும் உண்டு, வள்ளுவர் மதச் சார்பற்றவர் என்று சொல்வோரும் உண்டு. மறுபுறத்தில் அவரைப் பிராமணர், தேவர், நாடார், வன்னியர், பறையர் என்று சாதிச் சாயம் பூசும் முயற்சியும் நடைபெற்றது.

வள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் வேலை 19ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்தது என்று கூறுகிறார்கள். சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்பவர் திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயத்தை 1810 அளவில் வெளியிட்டதாகத் தெரிகிறது. அதில் வள்ளுவர் சமணரைப் போன்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர், 1904இல் இந்து தியலோஜிகல் மேல்நிலைப் பள்ளியில் பண்டிதராக இருந்த கோ.வடிவேலு செட்டியார் என்பவர் வெளியிட்ட திருக்குறளில் திருவள்ளுவரை சடாமுடி, தாடி மீசையுடன் மார்புக்குக் குறுக்காக துண்டும், ஒரு கையில் சின் முத்திரையுடன் செபமாலையும் மறுகையில் ஏடும், நெற்றியில் பட்டையும் குங்குமமும் உள்ளதாக வரையப்பட்டிருந்தது. இந்த உருவம் வழங்கப்பட்டமைக்கு இந்த நூலில் விளக்கம் சொள்ளப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பில் வள்ளுவர் ஒரு சைவ அடியார் போலவும் அவரிடம்  இரு அடியார்கள் தொழுவது போலவும் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னரான காலத்தில் சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1952இல் வெளியிட்ட நூல்களிலும் வள்ளுவர் சைவ அடியாராகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தார்.

அதேநேரம், இந்த நூல்களில் பயன்படுத்தப்படும் படங்களில் இருப்பது திருவள்ளுவர் அல்ல, அது திருவள்ளுவ நாயனார் என்பவரின் படம் என்கிறார்கள். அவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த, ஞான வெட்டியான் என்ற நூலை எழுதிய ஒருவர் என்று சொல்கிறார்கள். அவர் வாழ்ந்தது 16ம் நூற்றாண்டின் பிற்பகுதி என்போரும் உண்டு. மறுபுறத்தில் திருவள்ளுவரும் திருவள்ளுவ நாயனாரும் ஒன்று என்று வாதிடுவோரும் உண்டு.

இந்த சூழ்நிலையில் திராவிடச் சித்தாந்தம் செல்வாக்குடன் இருந்த 1950களின் பிற்பகுதியில்தான் வெள்ளுடையுடன் மதசார்பற்ற வள்ளுவரை வரையும் முயற்சி தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன்போது வேணுகோபால சர்மா என்ற பிராமணர் வரைந்த உருவப் படமே இன்றுவரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அரசாணை பெற்ற வள்ளுவர் உருவமாகவும் திகழ்கிறது. இவரும் தான் ஏன் வள்ளுவரை அப்படி வரைந்தேன், எவ்வாறு திருக்குறளிலிருந்து அதற்கான எண்ணக்கருக்களைப் பெற்றேன் என்று விளக்கவுரை ஒன்றையும் வெளியிட்டார்.

அதேநேரம், பிராமணரான அவர், இவ்வாறு திறனாய்ந்து திருக்குறளை எழுதும் ஆற்றல் பிராமணருக்கே இருந்திருக்கும் என்று சிந்தித்ததாகவும் அதனால் வள்ளுவருக்குப் பூணூல் போட்டு முதலில் வரைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பின்னர் பாரதி தாசனின் ஆலோசனைப்படி அது தெரியாத வகையில் சால்வையை வரைந்தாகச் சொல்லப்படுகிறது. 1959 அளவில் வள்ளுவரை இவர் வரைந்து முடித்த நிலையில் 1960 இல் இந்தப் படம் சி.என். அண்ணாத்துரையால் காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் வள்ளுவர் கிறிஸ்தவர் என்று சிலர் வாதம் செய்ததுடன் இரண்டு பாகங்களாகப் புத்தகம் வெளியிட்டு அதனை வலியுறுத்தப் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து, நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் இந்தியாவில் வள்ளுவரின் வெள்ளை வேட்டியை உருவிவிட்டு காவி கட்டி சிலர் அழகு பார்க்கத் தலைப்பட்டார்கள். 2019 நவம்பர் மாதத்தில் சமூக வலைத் தளத்தில் காவியுடை வள்ளுவரை தரவேற்றி தமிழர்களை ஆழம் பார்த்தது பா.ஜ.க. பின்னர் 2020 ஜனவரி மாதம் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கயா நாயுடுவும் காவியுடை வள்ளுவனை உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிந்து பின்னர் எதிர்ப்பால் பின்வாங்கி வெள்ளுடை வள்ளுவனை மீளப் பதிந்தார். ஆனால் தமிழ்நாட்டு பா.ஜ.க.வினர் இன்றுவரை தொடர்ந்தும் காவி கட்டிய வள்ளுவரை வெளியிட்டு மல்லுக்கட்டி வருகிறார்கள்.

இலங்கையைப் பொறுத்த வரையில், கடந்த காலங்களில் வள்ளுவர் மீதுள்ள மரியாதையால் சில முக்கிய இடங்களில் வள்ளுவர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் 2016இல் மறவன் புலவு சச்சிதானந்தத்தின் வேண்டுகோளை ஏற்று வி.ஜி.பி உலக தமிழ்ச்சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம் பைபர் கிளாஸினால் ஆன 16 வள்ளுவன் சிலைகளை இலங்கையிடம் ஒப்படைத்தார். இவற்றை தமிழர்கள் அதிகம் வாழும் திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, புத்தளம், புளியங்குளம் போன்ற இடங்களில் நிறுவுவதே மறவன் புலவு சச்சியின் திட்டமாகும். கடந்த வருடம் நவம்பர் மாதம் வலிவடக்கில் மக்கள் மீளக் குடியமர்ந்த வள்ளுவர்புரத்திலும் கருங்கல்லில் ஒரு வள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.

தற்போது இலங்கையின் வடக்கில் யாழ் பிரதம தபாலகத்துக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்ட வள்ளுவர் சிலையிலும் கடந்த மார்ச் 17இல் கலாநிதி ஆறுதிருமுருகனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையில் காணப்படும் சிவசின்னங்கள் மீண்டும் ஒருமுறை வள்ளுவரின் அடையாளத்தை விவாதிக்க வைத்துள்ளது.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பின் அதன் மெய்ப் பொருள் காணும்படி வள்ளுவர் சொன்னதை சரியாகப் புரிந்திருந்தால் கிறிஸ்தவராகட்டும், சைவ சமயத்தவராகட்டும், தங்களை இந்துக்கள் என்பவர்களாகட்டும், கடவுள் இல்லை என்பவர்களாகட்டும் எவருமே வள்ளுவர் யாரென்று தேடியிருக்க மாட்டார்கள். மாறாக வள்ளுவன் சொன்னவற்றில் ஒரு சில அறிவுரைகளையாவது பின்பற்றி தமது வாழ்வையும் தம்மைச் சூழ உள்ளவர்கள் வாழ்வையும் மகிழ்வானதாக மாற்றியிருப்பார்கள்.

ஏனெனில் மற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் அன்பு பாராட்டுவதும் உயர்ந்த மதம் என்ற உயர் கருத்தையே திருக்குறள் வலியுறுத்துகிறது. மனித இனத்தில் காணப்படும் பலவீனங்களை அகற்றி அறம் சார்ந்து இயங்கும் சமூகத்தைக் கட்டியெழுப்ப வழிகாட்டும் ஒரு பொது மறையைத் தந்த வள்ளுவர் உலகுக்குப் பொதுவானவர். அவரை உங்கள் மனதுக்கு உகந்தபடி அவரை உருவகிப்பதற்கும் மரியாதை செய்யவும் எவருக்கும் உரிமையுள்ளது. அதேநேரம் தமது அதிகாரத்தை வலுப்படுத்தவும் மற்றவர் மீது மதரீதியான ஆதிக்கம் செலுத்தவும் வள்ளுவரையும் திருக்குறளையும் பயன்படுத்த நினைப்பது ஏற்புடையதல்ல.

எழுதுவது ; வீமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *