நிறைவுக் கட்டத்தை நெருங்கும் வடமராட்சி ஞாபகார்த்தக் கிண்ண உதைபந்தாட்டம்
வடமராட்சி பிராந்தியத்தின் புகழ்பூத்த விளையாட்டு வீரர்கள்/ஆர்வலர்களை நினைவு கூரும் முகமாகவும் இப்பிரதேச விளையாட்டுத்துறையின் மேம்பாட்டினை இலக்காகக் கொண்டும் வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வடமராட்சியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்களின் அனுசரணையுடன் கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் வடமராட்சி ஞாபகார்த்தக் கிண்ணத்துக்கான மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது.
இப்போட்டியின் இறுதியாட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் யாழ் வடமராட்சி கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டியை நோக்கி பலம்வாய்ந்த மிகப் பலத்த போட்டியோடு நகர்ந்து கொண்டிருக்கின்றன.
நிறைவு நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஶ்ரீ சற்குணராஜா அவர்களும் சிறப்புவிருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் திரு. க.சத்தியபாலன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
“வடமராட்சிப் பிரதேசத்தின் விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்காகவும் எம்மில் பலருடன் விளையாடி எமது மண்ணுக்கு பெருமைசேர்த்து எம்மைவிட்டுப் பிரிந்துசென்ற வடமராட்சியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள், பயிற்றுனர்கள், ஆர்வலர்களை நினைவுகூரும் முகமாகவும் இப்போட்டியானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதை பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார்கள் ஒழுங்கமைப்பாளர்கள்.
இதே நிகழ்ச்சியில் வடமராட்சி பாடசாலைகளில் இருந்து தேசியமட்ட போட்டிகளில் பங்குபற்றிய வெற்றியாளர்களுக்கான கௌரவிப்பும் அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அத்துடன் தேசியமட்டத்தில் பங்குபற்றிய மாணவருக்கான மாதாந்த ஊக்குவிப்பு திட்டம்ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.
இந்த முயற்சியின் அடுத்த நகர்வாக வடமராட்சி பாடசாலைகளின் விளையாட்டை முன்னேற்றும் நோக்கில் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டம் மற்றும் கூடைப்பந்தாட்டப்போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக நடத்தப்படும் எனவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் உள்ள திறமையான வீரர்களை இனங்கண்டு அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒரு ஆரம்பநடவடிக்கையாகவும் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சிறந்த பயிற்றுனர்கள் ஊடான பயிற்சிகள் மற்றும் அவர்களின் விளையாட்டு உபகரணங்களுக்கான அனுசரணைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆதரவினை வழங்குவதற்கும் இப்போட்டிகளின் அனுசரணையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
உலகெங்கும் பரந்து வாழும் வடமராட்சியைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனுசரணையுடன் ” விளையாட்டால் ஒன்றிணைவோம் – விளையாட்டை முன்னேற்றுவோம் -நன்றி மறவாதிருப்போம்” என்ற தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டம் முழுக்க முழுக்க விளையாட்டுத் துறையின் அபிவிருத்தி மற்றும் வீரர்களினதும் துறைசார் நிபுணர்களதும் திறன் மேம்பாட்டினையும் இலக்காகக் கொண்டுள்ளது.
இச்செயற்திட்டத்தின் ஆரம்பமாகவே இந்த சுற்றுப்போட்டி நடத்தப்படுவதுடன் எதிர்காலங்களில் மேலும் பல விளையாட்டு நிகழ்வுகளை கழகங்கள், பாடசாலைகள் மட்டத்தில் நடத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் இப்போட்டி அனுசரணையாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் இறுதி போட்டி மற்றும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளில் உங்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.