சிறுமியை கடத்தியவர் கைது..!
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை கொக்குவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நேற்று முன்தினம்(24) இரவு வாகரையில் வைத்து கைது செய்துள்ளதுடன்,
சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி பாடாலைக்கு சென்ற நிலையில் சிறுமி வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.யூ.பி. விமலரத்தினவின் வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.சசீந்திரன் தலைமையிலான சிவகுமார்,
பெண் பொலிஸாரான அனங்சியா, ராதிகா உட்பட்ட பொலிஸ் குழுவினர் விசாரணையை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த சிறுமியை அவரது காதலன் வாகரைப் பிரதேசத்திலுள்ள அவனது சிறிய தாயாரின் வீட்டிற்கு கடத்திச் சென்று வைத்துள்ளதாக,
கண்டறிந்த பொலிஸார் சம்பவதினமான நேற்றுமுன் தினம் இரவு வாகரையில் சிறுமி தங்கவைக்கப்பட்ட வீட்டை சுற்றுவளைத்து முற்றுகையிட்டு சிறுமியை மீட்டதுடன்,.
கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 18 வயது காதலன் மற்றும் சிறுமிக்கு இடம்கொடுத்த குற்றச்சாட்டில் 47 வயதுடைய சிறிய தாயார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதில் மீட்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில்,
நேற்று (25) முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.