உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கொழும்பு 07இல் நடைபெற்ற Sri Lanka Association for the Advancement of Science நிகழ்வின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த உபவேந்தர் 2006ஆம் ஆண்டு டிசெம்பர் 15ஆம் திகதி காணாமலாக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான பிள்ளையான் 18 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கான தலைவரான கே.பால சுகுமாரை 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி கடத்திய கும்பல், சிவசுப்ரமணியம் ரவீந்திரனாத்தை உபவேந்தர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு அச்சுறுத்தியது. இதன்படி, ரவீந்திரநாத் தனது இராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தார்.
எனினும், அவரது இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளாது அவரை கொழும்பிலிருந்து தனது கடமைகளை செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
ரவீந்திரநாத்துக்கு உயிரச்சுறுத்தல் இருந்தமையால் கொழும்பு – தெஹிவளையில் உள்ள அவரது மகளின் வீட்டிலேயே வசித்து வந்தார். சில தேவைகளுக்காக வெளியில் செல்வதாக இருந்தால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்து வாகனம் ஒன்றை பெற்றுகொண்டு வெளியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ரவீந்தரநாத்துக்கு காணப்பட்ட உயிரச்சுறுத்தல் தொடர்பில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சம்பவம் நடைபெற்ற 2006ஆம் ஆண்டு டிசெம்பர் 15ஆம் திகதி கொழும்பு 07இல் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வருவேன் என மகளிடம் ரவீந்திரநாத் கூறியிருக்கிறார்.
எனினும், மதிய உணவுக்காக அவர் வீட்டுக்கு வரவில்லை என்பதால் அவரது மகள் மதியம் 2.45 மணியளவில் ரவீந்தரநாத்துக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோது அவரது தொலைபேசி Switch Off செய்யப்பட்டிருந்ததாகவும், அவரை அழைத்துச் சென்ற சாரதிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியபோது ரவீந்திரநாத்தின் தொலைபேசி Switch Off செய்யப்பட்டுள்ளதாக சாரதியும் மகளிடம் கூறியதாக 2006ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி வெளியான Sunday Times பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
பேராசிரியர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இது பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், அன்றைய தினம் மாலை 7 மணியளவில் தெஹிவளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. (பொலிஸ் நிலைய முறைப்பாட்டு இலக்கம் – CIB 2 225/260)
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே பொலிஸ் விசாரணைகள் சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டிருந்தது. இதன்போது, சிசிர மெண்டிஸே சி.ஐ.டியின் பணிப்பாளராக இருந்தார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்றபோது புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக சிசிர மெண்டிஸே இருந்தார்.
கருணா அம்மானின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களே பேராசிரியர் ரவீந்திரநாத்தை கடத்தியதாக Sunday Times பத்திரிகைக்கு சி.ஐ.டியினர் அப்போது தெரிவித்திருந்தார்கள்.
இந்த காலப்பகுதியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் காமினி சமரநாயக்கவே கடமையாற்றியிருந்தார். பேராசிரியர் ரவீந்திரநாத்துக்கு உயிரச்சுறுத்தல் இருந்தும்கூட ஏன் அவரது இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என Sunday Times பத்திரிகை அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதாகவும், அதுபோல பதவியில் இருந்து விலக்குவது தொடர்பான இறுதித் தீர்மானத்தையும் ஜனாதிபதியே எடுக்க முடியும் என காமினி சமரநாயக்க தெரிவித்திருந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சில பல்கலைக்கழக வரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவதற்கு அஞ்சி சேவைக்கு வருவதை நிறுத்தினார்கள். பல்கலைக்கழகத்தைவிட்டு மாணவர்கள் சிலரும் வெளியேறியிருந்தார்கள்.
பேராசிரியர் ரவீந்திரநாத் காணாமலாக்கப்பட்டு 3 நாட்களின் பின்னர், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென உலகம் முழுவதிலும் இருந்த 67 நிபுணர்கள் கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.
எவ்வாறாயினும் பேராசிரியரை கண்டுபிடிக்க முடியாமல்போனது.
1951 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி பிறந்த பேராசிரியர் ரவீந்திரநாத், தன்னுடைய 55ஆவது வயதில் காணாமலாக்கப்பட்டிருந்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மூடிமறைக்கப்பட்ட இதுபோன்ற விசாரணைகள் மீள விசாரிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதன் பிரதிபலனாக ரவீந்திரநாத்தின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. விசாரணையில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த சம்பவம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 09ஆம் திகதி பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் 2020ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 24ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி டி.சுசைதாசன் முன்னிலையில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, பிள்ளையானுக்கு எதிராக வழக்கை தொடர விரும்பவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்தது. இதன்படி, பிள்ளையானை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பிள்ளையானின் செயலாளராக செயற்பட்ட ஹன்சிர் அசாத் மௌலானா, பிள்ளையான் தொடர்புப்பட்டிருந்த பல குற்றச் செயல்கள் குறித்தும் பிள்ளையானுக்கு ஈஸ்டர் தாக்குதலில் தொடர்பிருப்பதாகவும் Channel 4 தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகள் சபைக்கும் இதுபற்றி அசாத் மௌலானா அறிவித்திருந்ததோடு, கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பிள்ளையானை விடுதலை செய்வதற்கான திட்டம் பற்றியும் வெளிப்படுத்தியிருந்தார்.
1975ஆம் ஆண்டு 18ஆம் திகதி பிறந்த பிள்ளையான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1990ஆம் ஆண்டு சிறுவர் போராளியாக இணைந்து நீண்டகாலமாக செயற்பட்டுவந்திருந்தார். பின்னர் புலிகளோடு ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகளால் கருணா அம்மானோடு புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி இலங்கை இராணுவத்துக்கு ஒத்துழைப்புகளை வழங்கிவந்தார்.
2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2007ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (தமவிபு) கட்சியின் உபதலைவராக இருந்த பிள்ளையான் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரானார். 2008 ஆண்டு மே 16ஆம் திகதியிலிருந்து 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 18ஆம் திகதி வரையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக செயற்பட்டிருந்தார். பின்னர் மாகாணசபை உறுப்பினராக தொடர்ந்து செயற்பட்டு வந்த பிள்ளையான், ஜோசப் பரராஜசிங்கம் கொலைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்தபோது 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்.
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில் பாராளுமன்ற உறுப்பினராகவும் பிள்ளையான் செயற்பட்டு வந்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிள்ளையான் ஆதரவு வழங்கியிருந்தார்.
வலைத்தள செய்தி…