ரஷ்யாவுடன் மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கசப்புக்களைத் தீர்த்துக்கொள்ள விரைவில் பேச்சுவார்த்தை.
சமீப மாதங்களில் ரஷ்யா தனது இராணுவப் படைகளைப் பெருமளவில் உக்ரேனின் எல்லையில் குவித்து வருகிறது என்று மேற்கு நாடுகள் குறிப்பிடுகின்றன. அது வெறும் கட்டுக்கதை என்று குறிப்பிட்டு மேற்கு நாடுகள் தனது எல்லையில் இராணுவப் பயிற்சிகள் நடத்தித் தம்மை மிரட்ட முற்படுவதாகப் பதிலுக்கு ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது.
எப்படியாயினும் ஐரோப்பிய நாடுகளில் எல்லையில் ஏற்பட்டிருக்கும் இராணுவப் பலப்பரீட்சை எவருக்குமே அமைதி தருவதாக இல்லை. அதைத் தீர்ப்பதற்காக ரஷ்யா சில கட்டுப்பாடுகளை அமெரிக்கா, ஐரோப்பா, நாட்டோ அமைப்பு ஆகியவை மீது போட்டிருப்பதாகச் செய்திகள் வந்திருந்தன. அவைகள் பற்றி ஜனவரி 10 ம் திகதி ஜெனிவாவில் நடக்கவிருப்பதாகத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜோ பைடன், புத்தின் இருவரும் நேரடியாகச் சம்பாஷிக்கவிருக்கும் அந்தச் சந்திப்பு பற்றிய ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகளில் இரண்டாவது பேச்சுவார்த்தை வியாழனன்று தொலைத்தொடர்பு மூலம் அவ்விரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவக் கூட்டணி, நாட்டோ அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவைகளுடன் ஜோ பைடன் கலந்தாலோசித்த பின்னரே புத்தினுக்கு உக்ரேன் – ஐரோப்பிய எல்லை பற்றிய தீர்வுகளுக்கான விபரங்களை ஜோ பைடன் தெரிவிக்கவிருக்கிறார். அவைகள் பற்றி இரண்டு தலைவர்களும் பேரம்பேசிய பின்னர் ஜனவரி 10 திகதி ஜெனீவாவில் சந்தித்து அவர்கள் ஒரு முடிவான தீர்வை வெளியிட்டுக் கைகுலுக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்